மல்யுத்த வீரர்களை நள்ளிரவில் சந்தித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

மல்யுத்த வீரர்களை நள்ளிரவில் சந்தித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

ந்தியாவுக்குப் பதக்கங்களைப் பெற்றத் தந்து பெருமை சேர்த்த மல்யுத்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு விதங்களில் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர்.

பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் தலையிட்டதன் பேரில் பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும், அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவின் சமயம் அதை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது அவர்களை போலீசார் கடுமையான முறையில் தடுத்து நிறுத்தி கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதையடுத்து, மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள், ‘தாங்கள் பல்வேறு போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசுவோம்’ என்று அறிவித்ததைத் தொடர்ந்து, விவசாயிகள் சங்கத்தினர் இதில் தலையிட்டு அவர்களுக்கு ஆதரவு கொடுத்ததுடன், மத்திய அரசு இந்த விஷயத்தில்  நடவடிக்கை எடுக்க காலக் கெடுவை நிர்ணயித்தனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவுக்கு மேல், மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது இல்லத்தில் சந்தித்துப் பேசி இருக்கிறார். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது மல்யுத்த வீரர்கள் தரப்பில் பாஜக எம்பி பிரிஜ் பூஷண் கைது செய்யப்பட வேண்டும், அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும், டெல்லி காவல்துறை இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் அமித்ஷாவிடம் மல்யுத்த வீரர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நடைபெற்ற இந்த சந்திப்பில் மல்யுத்த வீரர்கள் தரப்பில், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ், போகத் உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

கிழக்கு உத்தரப் பிரதேச அரசியல் நிழல் உலக தாதாவாக விளங்கிவரும் பிரிஜ் பூஷண் அம்மாநில 12 லோக்சபா தொகுதிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் மாபெரும் சக்தியாக விளங்கி வருகிறார். பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை பாயும் பட்சத்தில் பாஜக இந்த 12 தொகுதிகளை இழக்க வேண்டிவரும் என்பதால் இந்த விஷயத்தில் அந்தக் கட்சி நிறையவே யோசிக்கும் என்று பல்வேறு தரப்பினராலும் விமர்சனம் செய்யப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com