ஹெளரா - புரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

ஹெளரா - புரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

ஒடிஸாவின் புரி நகருக்கும் மேற்கு வங்கத்தின் ஹெளராவுக்கும் இடையே இயங்கும் ஓடிஸாவின் முதல் வந்தேபாரத் ரயிலை பிரதமர் மோடி தில்லியில் இருந்து காணொலி முறையில் தொடங்கிவைத்தார்.

ரூ.8,200 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார்.

இதற்காக புரி ரயில்நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒடிஸா ஆளுநர் கணேஷிலால், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் காணொலி முறையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பிரதமர் பேசுகையில் ஹெளரா- புரி வந்தேபாரத் ரயில் மத, கலாசார, ஆன்மிக தொடர்புகளை வலுப்படுத்தும்.

நாட்டில் தற்போது 15 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவை மக்களின் பயணத் தொடர்புகளையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தி வருகின்றன.

புதிய தொழில்நுட்பங்கள் தில்லி மற்றும் பெரு நகரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், இந்தியா தற்போது புதிய பாதையை தேர்ந்தெடுத்துள்ளது. புதிய இந்தியா தனது சொந்த தொழில்நுட்பங்களை கட்டமைத்து வருகிறது.

சுதந்திரத்தின் அமிர்த காலத்தை நாடு கொண்டாடிவருகிறது. இந்தியாவில் ஒற்றுமை வலுப்பட்டால் அதன் கூட்டுத்திறனும் அதிகரிக்கும். இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் ஒடிஸாவும் பயணித்து வருகிறது.

மிகவும் சவாலான காலகட்டத்திலும் இந்தியா தனது வளர்ச்சிப் பாதையில் திறம்பட பயணித்து வருகிறது. அனைத்து மாநிலங்களும் இந்தியாவின் வளர்ச்சியில் பங்கெடுத்து வருவதே இதற்கு காரணமாகும் என்றார்.

புரி-ஹெளரா வந்தேபாரத் ரயில் இரு நகரங்களுக்கு இடையிலான 500 கி.மீ. பயண தூரத்தை 6.5 மணி நேரத்தில் கடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பல்பூர்-தீட்லாகர் இடையிலான இரட்டை வழித்தட ரயில்பாதை, அங்குல்-சுகிந்தா இடையிலான புதிய அகல ரயில்பாதை, மனோஹர்பூர்-ரூர்கேலா-ஜார்சுகுடா-ஜாம்கா இடையிலான மூன்றாவது வழித்தடம், பிச்சுபாலி-

ஜார்தாபா இடையிலான புதிய அகல ரயில்பாதை ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.

ஒடிஸா மாநிலத்தில் எஃகு, எரிசக்தி, சுரங்கம் ஆகிய தொழில்கள் வேகமாக வளர்ந்து வருவதன் காரணமாக எழுந்துள்ள போக்குவரத்து தேவைகளை இத்திட்டங்கள் பூர்த்தி செய்யும் என்றும் பயணிகள் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புரி-ஹெளரா வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வியாழக்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களிலும் இயக்கப்படும். தினமும் காலை 6.10 மணிக்கு ஹெளராவிலிருந்து புறப்படும் இந்த ரயில் பகல் 12.35 மணி அளவில் புரி ரயில்நிலையத்தை வந்தடையும். இதேபோல புரியிலிருந்து பிறபகல் 1.50 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.30 மணி அளவில் ஹெளரா ரயில்நிலையத்தை சென்றடையும்.

ஹெளரா-புரி வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும். கரக்பூர், பலாஸோர், பத்ரக், ஜெய்பூர், கியோன்ஜ்ஹர் சாலை, கட்டாக், புவனேஸ்வரம் மற்றும் குர்தா சாலை ரயில்நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com