நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் - நிதி ஒதுக்கீட்டை குறைத்த மத்திய அரசு; பீதியில் மாநில அரசுகள்!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத்திட்டம், இந்தியா முழுவதும் பிரபலமான திட்டம். கொரானா பரவல் தொற்று உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பல கோடி பேருக்கு வாழ்வாதாரமாக இருந்த திட்டம். திட்டமிட்டதை விட அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், பல மாநிலங்களில் திட்டம் முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டது.
பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் மட்டுமல்ல பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் கூட நல்ல ஒத்துழைப்பு கிடைத்து வந்தது. திட்டத்திற்கு கிடைத்து வந்த ஆதரவை தொடர்ந்து மத்திய அரசு, கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியே வந்திருக்கிறது.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு திட்டங்களின் பலன் சென்றடைந்தாலும், இதுவொரு செலவுக்குரிய திட்டமாகவே பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்ட வந்தார்கள். தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நிதி ஒதுக்கீடு போதவில்லை என்கிற விமர்சனங்களும் எழுந்தன.
சில மாதங்களுக்கு முன்னர் 100 நாள் வேலை திட்டத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு, மேற்கு வங்க மாநிலத்திற்கு குழுக்களை அனுப்பி வைத்து ஆய்வு மேற்கொண்டது. பா.ஜ.க ஆளும் உத்திரப் பிரதேசத்திற்கோ, குஜராத்திற்கோ மத்திய குழுக்கள் அனுப்படுவதில்லை ஏன் என்று மம்தா பானர்ஜியும் அதை கடுமையாக விமர்சித்திருந்தார்.
நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை தொடர்ந்து நடத்த, நடப்பாண்டில் குறைந்தபட்சம் 87 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்கிற கோரிக்கை பல்வேறு தரப்புகளிலிருந்தும் எழுந்தது. ஒரு சில குறைகள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாகவே திட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டுவருவதால் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் கடந்த பட்ஜெட் அறிவிப்பில் திட்டத்திற்கான நிதியை குறைத்திருப்பது பல மாநிலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ஏறக்குறைய 13 ஆயிரம் கோடி ரூபாய், நடப்பாண்டில் குறைக்கப்பட்டுள்ளது. நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தை முன்வைத்து மாநில அரசுகள் பல்வேறு பணிகளை திட்டமிட்டிருந்தன. இந்நிலையில் குறைவான நிதி ஒதுக்கீடு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
'நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம் என்பது மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திட்டம். அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் பா.ஜ.க அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. குறைந்தபட்சம், அதில் எந்த மாற்றங்களையும் செய்யாது என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், 60 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருக்கிறது. மாநிலங்கள் எப்படி சமாளிக்கப் போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்கிறார்கள் பொருளாதார விமர்சகர்கள்.'நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதற்கு என்னதான் காரணமாக இருக்கும்?'