நூறு நாள் வேலை: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு!

நூறு நாள் வேலை: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு!

'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் எனப்படும் நூறு நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதில் மேற்கு வங்காளம் முதலிடம் வகிக்கிறது. ஆனால், அதற்குத் தேவையான நிதியை வழங்காமல் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு சரியாக நிதியை அளித்து வருகிறது. மேற்கு வங்கத்திற்கு ரூபாய் 6 ஆயிரம் கோடி பாக்கி வைத்துள்ளது. மத்திய அரசின் நிதி இல்லாமல்தான் நூறு நாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்தி வருகிறோம்’ என்று நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியிருக்கிறார்.

‘நூறு நாள் வேலை திட்டத்தை ஆய்வு செய்வதற்காக மேற்கு வங்கத்திற்கு மத்திய அரசு குழுக்களை அனுப்பி வைத்திருக்கிறது. இதுதான் மம்தா பானர்ஜியை வருத்தப்பட வைத்திருக்கிறது. மாநில அரசை துன்புறுத்துவதற்காகவே மத்திய அரசு குழுக்களை அனுப்பி வைக்கிறது. பா.ஜ.க. ஆளும் உத்திரப் பிரதேசத்திற்கோ, குஜராத்திற்கோ மத்திய குழுக்கள் அனுப்பப்படுகிறதா?’ என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்.

2022-23 நிதியாண்டிற்கான புதிய ஊதிய விகிதங்களை அறிவித்தபோதே சர்ச்சை எழுந்தது. அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஊதியம் 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. குஜராத், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்கம், சிக்கிம், ஹிமாச்சல பிரதேசம், அந்தமான் & நிக்கோபார் தீவுகள், பஞ்சாப், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் 4 முதல் 5 சதவீதம் வரையும் ஊதிய உயர்வைப் பெற்றன.

குறிப்பாக, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அதிக ஊதியம் தரப்பட்டது. மேற்கு வங்கத்தை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் ஊதிய விகிதம் குறைவுதான் என்றாலும் இதுவரை எந்த பிரச்னைகளும் எழவில்லை. ஆனால், நூறு நாள் வேலை திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாட்டில் ஏராளமான புகார்கள் எழுப்பப்படுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் நூறு நாள் வேலை திட்டம் முறையாக நடைபெறவில்லை. நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்களை சொந்த பணிக்கு பயன்படுத்துவதாக வரும் புகார்களே அதிகம். இது குறித்து தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தைப் போல் தமிழ்நாட்டிலும் ஆய்வுகளை மேற்கொள்ள, மத்திய அரசு குழுக்களை அனுப்பி வைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com