நான் இந்தியா வருவது உறவை வலுப்படுத்த அல்ல: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ!

நான் இந்தியா வருவது உறவை வலுப்படுத்த அல்ல: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ!

இந்தியா-பாகிஸ்தான் இருநாட்டு உறவை வலுப்படுத்தும் நோக்கில் தாம் இந்தியா வர திட்டமிடவில்லை என்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பு சார்பில் இந்தியா ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் கலந்துகொள்ளவே இந்தியா வர உள்ளதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவலர் புட்டோ ஜர்தாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக துனியா செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் பிலாவல் புட்டோ கூறியுள்ளதாவது: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் சார்பில் அடுத்த மாதம் கோவாவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கவே நான் இந்தியா வருகிறேன். எனது வருகையை இந்தியா-பாகிஸ்தான் கூட்டுறவை வலுப்படுத்தும் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரி கூறியுள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாஹிரா, வியாழக்கிழமை

பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கையில், இந்தியாவில் வரும் மே மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதி நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ பங்கேற்க இருப்பதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விடுத்த அழைப்பின் பேரிலேயே அதில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தீர்மானங்கள் மற்றும் செயல்பாடுகளை தொடர்ந்து ஆதரிக்கும் நிலையிலேயே வெளியுறவுக் கொள்கைகளின் அடிப்படையிலேயே பாகிஸ்தான் இந்த மாநாட்டில் பங்கேற்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடைசியாக 2011 ஆம் ஆண்டு அப்போது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராக இருந்த ஹினா ரப்பானி கர் இந்தியாவுக்கு வந்திருந்தார். அதன் பிறகு ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வரும் முதல் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பில் இடம்பெற்றுள்ள சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு மாநாட்டில் பங்கேற்க வருமாறு இந்தியா முறைப்படி அழைப்பு அனுப்பியுள்ளது. இந்த மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சர் குன் காங் மற்றும் ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இருவரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பின் தலைமை தலைமைப் பொறுப்பை இந்தியா கடந்த ஆண்டு செப்டம்பரில் ஏற்றது. 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த அமைப்பில் ரஷியா, இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் நான்கு மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

எல்லைதாண்டிய பயங்கரவாதப் பிரச்னை காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே சில ஆண்டுகளாக சுமுக உறவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுடன் பேச்சு நடத்தும் முன்பு ஜம்மு காஷ்மீரில் மீண்டும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை அமல்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது.

இந்த கூட்டமைப்பில் ஈரான் புதிய உருப்பினராகச் சேர்ந்துள்ளது. கடைசியாக 2022 செப்டம்பரில் உஸ்பெகிஸ்தானில் சாமர்கண்டில் இதன் கூட்டம் நடைபெற்றது. இந்தியா சார்பில் பிரதமர் மோடி இதில் பங்கேற்றிருந்தார். 2019 ஆம் ஆண்டு இந்த மாநாடு கிர்கிஸ்தானின் பிஷ்கெக் என்னுமிடத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com