7 வயதிலிருந்து எனக்கு இருந்து வந்த பாலியல் அச்சுறுத்தலை 15 வயதில் கடந்தேன்: குஷ்புவின் வெளிப்படையான பேச்சு!

7 வயதிலிருந்து எனக்கு இருந்து வந்த பாலியல் அச்சுறுத்தலை 15 வயதில் கடந்தேன்: குஷ்புவின் வெளிப்படையான பேச்சு!

என் ஏழு வயதிலிருந்து நான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி வந்துள்ளேன். எனது சொந்தத் தந்தை மூலமாகவே இது எனக்கு நிகழ்ந்தது. ஆரம்பத்தில் அத்தனை சிறு வயதில் இதைப் பற்றி வெளியில் சொல்ல நான் பயந்தேன். ஆனால், தொடர்ந்து இந்த விதமாக நடத்தப்படுவது குறித்து எனக்கு கோபம் இருந்தது. ஒரு சமயத்தில் எனது 15 வது வயதில் அது வெடித்துக் கொண்டு வெளிப்பட்டு விட்டது. என் தந்தையின் அராஜகத்துக்கு எதிராக நான் சண்டையிடத் துவங்கினேன். இத்தனைக்கும் இதைப்பற்றி என் அம்மாவிடம் புகார் அளிக்க அப்போது எனக்கு பயமாகத்தான் இருந்தது. என் அம்மா, அப்போது அடக்கு முறைக்கு ஆளாகியும் கூட தன் கணவர் மீது பற்றும், பாசமும் கொண்டவராகவே இருந்தார். ஆனால், என்னால் தாங்க இயலாத போது உண்மை உடைபட்டு வெளியில் வந்தது. நான் எனக்கு நிகழ்ந்த அநீதியைப் பற்றி பேசத் தொடங்கினேன். என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு உத்வேகத்தை தரக்கூடும் என்பதாலேயே நான் எனக்கு நிகழ்ந்ததைப் பற்றி இத்தனை வருடங்களுக்குப் பிறகு வெளியில் சொல்லத் தொடங்கி இருக்கிறேன்.

-என்கிறார் குஷ்பு.

"ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படும்போது அந்த மோசமான நிகழ்வானது அந்த குழந்தையின் வாழ்நாள் முழுவதுமே ஒரு வடுவாகப் பதிந்து விடுகிறது" என்று கூறும் குஷ்பு, தன் தந்தையின் மோசமான இந்த முகத்தைப் பற்றி இதற்கு முன்பு எப்போதுமே பொதுவெளியில் பேசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகரும், அரசியல்வாதியும், தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) உறுப்பினருமான குஷ்பு சுந்தர், சமீபத்தில் ஜெய்ப்பூரில் மோஜோ ஸ்டோரி ஏற்பாடு செய்த "வீ தி வுமன்" டவுன் ஹாலில் பேசும் போது மேற்கூறிய அதிர்ச்சிகரமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

"என் தாய் மிகவும் மோசமான ஒரு திருமண பந்தத்தை அனுபவித்து வந்தார், ஒரு மனிதர் தனது மனைவியையும், குழந்தைகளையும் அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார், அவர், தனது ஒரே மகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்தார். தான் ஒரு ஆணாகப் பிறந்ததால் இவையெல்லாம் தனது பிறப்புரிமை என்று அவர் நினைத்தார், முதன்முதலாக பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்கு ஆளான போது எனக்கு 7 வயது தான். அப்போது எனக்கு என் தந்தையை எதிர்த்துக் குரல் எழுப்ப தைரியம் இல்லை. ஏனென்றால், நான் இது குறித்து சண்டையிட்டாலோ, என் தாயிடம் புகார் சொன்னாலோ என் தந்தை என் தாயையும், சாகோதரர்களையும் என் கண் முன்னே அடித்து துவைத்து விடுவதாக பயமுறுத்தினார். அப்போது எனக்கு அது அச்சத்தை தந்தது. ஆனால், இந்த அநீதியை எதிர்க்கும் துணிவு எனக்கு என் 15 வயதில் வந்து விட்டது. ஒருவேளை அப்போதும் நான் அஞ்சிக் கொண்டிருந்திருந்தால் இன்று நான் இந்த நிலையை எட்டி இருக்க முடியாது.

"15 வயதில், அது போதும் என்று நான் நினைத்தேன், நான் என் தந்தையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தபோது,அவர் எங்களை அம்போவென கைவிட்டு விட்டுச் சென்று விட்டார். அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரப்போகிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர் எங்களை விட்டுச் சென்றார்." என்று அந்த வேதனையான நாட்களை குஷ்பு சுந்தர் நினைவு கூர்ந்தார்.

ஆனால், இப்போது, இன்றைய நிலையில் இருந்து யோசித்துப் பார்க்கும் போது... தனது தந்தைக்கு எதிராக நின்றதை எண்ணி தான் இப்போது மகிழ்ச்சியடைவதாக அவர் கூறினார், ஏனெனில் அவர் எங்கள் குடும்பத்தில் இருந்திருந்தால், நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். என்று கூறும் குஷ்பு தன் தந்தை குறித்து மேலும் பகிர்ந்து கொண்ட செய்தி... என் தந்தை எங்களை விட்டுச் சென்றதால் நிம்மதியாக ஒன்றும் வாழ்ந்து விடவில்லை. அவரது இறப்பின் போது என் சகோதரர்கள் யாரும் அவரை எட்டிக் கூடப் பார்க்கவில்லை. ஒரு அனாதையாகத்தான் அவரால் இந்த உலகத்தை விட்டுச் செல்ல முடிந்தது. - என்றார் கசப்புடன்.

முதலில் வீட்டில் உள்ள அநீதிகளை எதிர்த்துச் சண்டையிட முடிந்தால், பிறகு நம்மால் இந்த உலகத்தை மிக எளிதாக நிர்வகிக்க முடியும்" என்று கூறும் குஷ்பு, துஷ்பிரயோகம் நடந்து நீண்ட காலத்துக்குப் பிறகு இப்போது ஏன் அதைப் பற்றி பேச வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், விவரம் அறியா வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகும் போது ஒரு குழந்தைக்கு நடக்கும் மனச்சிதைவைப் பற்றி நான் நன்கு அறிவேன். எனக்கே அது நிகழ்ந்திருக்கும் போது அது தரும் வலி, வேதனைகளைப் பற்றி அறிந்த நானே அதைப்பற்றி பேசினால் தான் சரியாக இருக்கும் என்று எண்ணினேன். இப்போது ஏன் பேசுகிறேன் என்றால், இப்போது அந்த மனச்சிதைவிலிருந்து நான் வெளியில் வந்து விட்டேன். இதைப் பற்றி வெளிப்படையாகப் பேசும் தைரியத்தை என் குழந்தைகளும், கணவரும் எனக்கு அளித்திருக்கிறார்கள். அந்த தைரியத்தில் இதைப் பற்றி நான் இப்போது வெளிப்படுத்தி இருக்கிறேன்.

எல்லோருக்குமே எனக்கு கிடைத்ததைப் போல புரிதலான, அணுசரனையான குடும்பம் கிடைக்கும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், இப்படியான துஷ்பிரயோகத்துக்கு உட்படும் போது அதை வெளியில் சொல்லும் தைரியம் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது

எதிர்பார்ப்பு. வேண்டுகோள்! அதற்காக மட்டுமே நான் இப்போது இதை வெளிப்படுத்தி இருக்கிறேன்.

- என்கிறார்.

1990களில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, விஷ்ணுவர்த்தன்,மம்மூட்டி, மோகன்லால் உட்பட அனைத்து தென்னிந்திய முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து தென்னிந்திய சினிமாக்களின் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த குஷ்பு, பின்னர் அரசியலுக்கு வந்தார். முதலில் திமுக பின்னர் காங்கிரஸ் என்று வலம் வந்து விட்டு 2020ல் பாஜகவில் சேர்ந்தார். கட்சிகள் வேறு வேறாக காட்சிகள் மாறிய போதும் கூட பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு குரல் கொடுக்கும் போது மட்டும் குஷ்புவின் குரல் எப்போதும் மாறாது ஒரே விதமாக சற்றுக் காட்டமாகவே ஒலிக்கிறது.

Other Articles

No stories found.