30 ஆண்டுகளில் 55 முறை இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி! - சோனியா காந்தி மருமகன் நில விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்தவர்!!

அசோக் கெம்கா
அசோக் கெம்கா

பொதுவாக அரசு அதிகாரிகள் ஓய்வுபெறுவதற்குள் அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு முறைதான் பணியிடமாற்றம் செய்யப்படுவார்கள். ஆனால், ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அசோக் கெம்கா கடந்த 30 ஆண்டுகளில் 55 முறை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நேர்மைக்கு பெயர்போன இந்த அதிகாரிக்கு கிடைத்த பரிசு பணியிடமாற்றம்தான். அதாவது ஆண்டுக்கு இரண்டு முறை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பா.ஜ.க. ஆட்சில் மட்டுமல்ல காங்கிரஸ் ஆட்சியிலும் இவர் பலமுறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கள்கிழமை (ஜன.9) ஹரியாணா அரசு அசோக் கெம்காவை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அவருடன் மேலும் சில அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். 30 ஆண்டு காலத்தில் இது அவருக்கு 55 வது இடமாற்றமாகும்.

அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாராக இருந்த அவர், இப்போது ஆவண காப்பகத்துறையின் கூடுதல் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். எதற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்ற காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

சமீபத்தில் ஹரியாணா மாநில தலைமைச் செயலர் சர்வேஷ் கெளஷலுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அறிவியல் தொழில்நுட்பத்துறை உயர்கல்வித்துறையுடன் இணைக்கப்பட்ட பிறகு தமக்கு வேலையே இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் அந்த கடிதத்தை எழுதியிருந்த ஒரு சில நாட்களில் இந்த இடமாற்றம் வந்துள்ளது.

1991 ஆம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அசோக் கெம்கா முன்னதாக காப்பகத் துறையின் தலைமை இயக்குநராகவும் பின்னர் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றினார். 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் முதன் முதலில் அவர் இந்த துறைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் 2021 இல் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். கடந்த ஆண்டு அவர் கூடுதல் தலைமைச் செயலாராக பதவி உயர்வு பெற்றார். இந்த நிலையில் அவர் மீண்டும் காப்பகத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவரது பணிக்காலம் தொடர்ச்சியாக பல சர்ச்சைகளைக் கொண்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ரா தொடர்புடைய குருகிராம நில விவகாரத்தில் இவர் எடுத்த அதிரடி நடவடிக்கை பரபரப்பாக பேசப்பட்டது. அந்த நிலத்தின் பதிவை ரத்துச் செய்து கெம்கா உத்தரவிட்டிருந்தார். இது நடந்த சில மாதங்களில் அவர் காப்பக துறைக்கு மாற்றப்பட்டார்.

இதுபோல நடக்கும் இடமாற்றங்களால் தனது பணி தொடர்பான வாழ்க்கை பின்தங்கிவிட்டதாக அவர் டுவிட்டர் மூலம் வெளிப்படையாகவே ஏமாற்றத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com