மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வுகாணாவிட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: எதிர்க்கட்சிகள் கூட்டணி!

மணிப்பூர் ஆளுநருடன் ‘இந்தியா’ குழுவினர்
மணிப்பூர் ஆளுநருடன் ‘இந்தியா’ குழுவினர்Editor 1

ணிப்பூர் இனமோதல்களுக்கு விரைவில் தீர்வுகாணாவிட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகிவிடும் என்று எதிர்க்கட்சியான ‘இந்தியா’ கூட்டணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழு இம்பாலில் மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கியை நேரில் சந்தித்து தங்களின் அனுபவத்தை அறிக்கையாக அவரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

பின்னர் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளதுரி தெரிவிக்கையில், “ மணிப்பூர் நிலவரம் குறித்து மாநில ஆளுநர் அனுசுயாவிடம் அறிக்கை அளித்துள்ளோம். எங்களின் நேரடி அனுபவத்தை அவரிடம் தெரிவித்தோம். மணிப்பூரில் வன்முறை குறித்து கவலை வெளியிட்ட் அவர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதை ஒப்புக் கொண்டார்.

இங்குள்ள குக்கி மற்றும் மெய்டீஸ் இன மக்களிடையே இருக்கும் அவநம்பிக்கையை போக்கும் வகையில் அனைத்துக்கட்சி குழுவினர் மணிப்பூர் வந்து இரு வகுப்பினரிடையேயும் பேச்சு நடத்த வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்தார். அவரது யோசனைக்கு நாங்களும் வரவேற்பு தெரிவித்தோம் என்றார் செளதுரி.

மணிப்பூரில் எதிர்க்கட்சியினர் மக்களை சந்தித்துப் பேசியது தொடர்பாக விஷயங்கள் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் தெரிவிப்பார்கள். இதன் மூலம் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் தயாராக இருக்கிறோம். மணிப்பூரில் மத்திய, மாநில அரசுகள் செய்யத் தவறியதை எடுத்துரைப்போம். இது தொடர்பாக நாடளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோளாகும் என்றார் அவர்.

மணிப்பூரில் நிலைமை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் மெய்டீஸ் இன மக்கள் மலைப்பகுதிகளுக்குச் செல்ல முடியவில்லை. அதேபோல மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி இன மக்கள் பள்ளத்தாக்குப் பகுதிக்கு வர முடியவில்லை. அந்த அளவுக்கு நிலமை மோசமாக உள்ளது.

ரேஷன் உணவுப் பொருள்கள், மாட்டுத் தீவனம், பால், குழந்தைகளுக்கான பால் உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு உள்ளது. மாணவர்களின் கல்வி தடைபட்டுள்ளது. இவையெல்லாவற்றையும் நாங்கள் மாநில ஆளுநரிடம் எடுத்துக் கூறினோம். கூட்டு முயற்சி இருந்தால்தான் இந்த பிரச்னைகளுக்கு தீர்வுகாண முடியும் என்று அவர் கூறியதாக செளதுரி தெரிவித்தார்.

மூன்று மாதங்களாக வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உண்மை நிலைவரம் என்ன என்பதை பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை இம்பால் வந்தனர். அக்குழுவினர் இம்பால், மொய்ராங் மற்று சூரசந்திரபூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினர். காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளதுரி தவிர மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கெளரவ் கோகோய், சுஷ்மிதா தேவ் (திரிணமூல் காங்கிரஸ்), மஹுவா மாஜி (ஜே.எம்.எம்.), கனிமொழி (திமுக), முகமது ஃபைஸல் (என்.சி.பி.), செளதுரி ஜெயந்த் சிங் (ஆர்.எல்.டி.), மனோஜ் குமார் ஜா (ஆர்.ஜே.டி), திருமாவளவன் (விசிக) உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் வன்முறைக்கு இதுவரை 160 பேர் பலியாகியுள்ளனர். தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று கோரி மெய்டீஸ் இன மக்கள் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி பேரணி நடத்தியதை அடுத்து வன்முறை ஏற்பட்டது. மணிப்பூர் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர்  மெய்டீஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள். 43 சதவீதம் பேர் குக்கி இனத்தைச் சேர்ந்தவர்கள். குக்கிகள் பெரும்பாலும் மலைப்பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com