ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

”டாஸ்மாக் மீது வழக்கு தொடுக்கமுடியுமா?” ஆன்லைன் ரம்மி கம்பெனி கேள்வி - சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆன்லைன் நிறுவனங்கள் எதிர்ப்பு!

ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் பற்றிய சர்ச்சை ஆரம்பித்த பிறகு இதுவரை 47 தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆளுநர் - தமிழக அரசு மோதல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்தவர்கள் குறித்த தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி விசாரணையும் சூடுபிடித்திருக்கிறது.

ப்ளே கேம்ஸ் 24 X7 என்னும் மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம், சி.பி.சி.ஐ.டி விசாரணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது. மும்பை, பெங்களூரில் எங்களுக்குக் கிளை இருக்கின்றன. அதில் 750 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி விசாரணை எங்களுடைய நிறுவனத்தின் மீது தேவையில்லாத பழியை ஏற்படுத்தியிருப்பதாக உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள்.

சென்ற ஆண்டின் தொடக்கத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்ட மணிகண்டன் என்பவரது வழக்கை சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். சென்னையைச் சேர்ந்த மணிகண்டன் என்னும் ரம்மி பிளேயர், ஆன்லைன் விளையாட்டில் அனைத்தையும் இழந்து தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக 26 கேள்விகளை முன்வைத்து சம்பந்தப்பட்ட ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்திற்கு சி.பி.சி.ஐ.டி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மணிகண்டனுக்கும் ப்ளே கேம்ஸ் நிறுவனத்திற்கும் இடைப்பட்ட வங்கி பரிவர்த்தனைகள், அவருடைய கணக்கில் செய்யப்பட்ட வருமான வரி பிடித்தம், எத்தனை நாள், என்னென்ன விளையாடுகளை விளையாடினார், எத்தனை மணி நேரம் விளையாடினார், அதன் மூலம் அவருக்குக் கிடைத்த வருமானம் குறித்த கேள்விகள் சி.பி.சி.ஐ.டி நோட்டீஸில் இடம்பெற்றுள்ளன.

இந்திய அரசியல் தண்டனைச் சட்டம் செக்ஷன் 91 கீழ், மணிகண்டன் சம்பந்தப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளவேண்டுமென்று சி.பி.சி.ஐ.டி கேட்டிருக்கிறது. அவரது கஸ்டமர் ஐடி, கே.ஒய்.சி தகவல்கள், ஆதார் நம்பர், பான் கார்டு நம்பர் அனைத்தையும் சமர்ப்பிக்குமாறு கேட்டிருக்கிறார்கள். இது தவிர 2016 தொடங்கி நிறுவனத்தின் நிதிநிலை கணக்குகளையும் கேட்டிருக்கிறார்கள்.

சி.பி.சி.ஐ.டி கேட்கும் விபரங்களை சமர்ப்பிக்கமுடியாது என்று நீதிமன்றத்தை நாடியுள்ள ப்ளே கேம்பஸ் நிறுவனம், இறந்து போன மணிகண்டன் கடைசியாக 2017 ஆண்டில்தான் ப்ளே கேம்ஸ் உடன் விளையாடியதாகவும் அடுத்து வந்த ஐந்தாண்டுகளுக்கு தங்களுடைய ஆன்லைன் கேம்ஸில் விளையாடவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் குடிக்கு அடிமையாகி, ஏராளமானவர்கள் இறந்து போகிறார்கள். அதற்காக காவல்துறையினர் டாஸ்மாக் மீது வழக்கு தொடுக்க முடியுமா என்று நிறுவனத்தின் தரப்பு கேள்வி கேட்டிருக்கிறது. சபாஷ், சரியான கேள்வி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com