அதிகரிக்கும் கழிவு நீர் தொட்டி உயிர் பலி, நம்பிக்கை தரும் நமஸ்தே திட்டம்!
கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி கூலித் தொழிலாளி பலி - ஒவ்வொரு வாரமும் இப்படியொரு பெட்டிச் செய்தியை முன்னணி நாளிதழ்களில் பார்க்க முடியும். மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது, ஜாதிக்கொடுமையாக கருதப்படும் தமிழ்நாட்டிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
கழிவு நீர் தொட்டி விஷவாயு தாக்கி இறக்கும் சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்ற ஆண்டு மட்டும் இந்தியா முழுவதும் ஏறக்குறைய ஆயிரம் தொழிலாளர்கள் மூச்சு திணறி இறந்திருக்கிறார்கள். அடிக்கடி கழிவு நீர் தொட்டி விபத்துகளை சந்திக்கும் மாநிலமாக இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை, தமிழகத்தில்தான் முதலில் தடை செய்யப்பட்டது. இயந்திரங்கள் மூலமாகத்தான் செய்யப்படவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 2013ல் மனிதக் கழிவுகளை மனிதர்கள் தூய்மை செய்வதை தடுக்கும் சட்டம் தேசிய அளவில் கொண்டு வரப்பட்டது. ஆனால், முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை.
இயந்திரங்களை கொண்டு தூய்மைப்படுத்தினாலும், கழிவு நீர் தொட்டி அடைப்புகளை சரி செய்வதற்கு தூய்மைப் பணியாளர்களை பயன்படுத்த வேண்டியிருக்கிறது. எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளையும் மேற்கொள்ளாமல், கழிவு நீர் தொட்டியில் இறங்கி அடைப்புகளை நீக்கும் கூலித்தொழிலாளிகளில் அதிகம் பேர் மூச்சு திணறி, சம்பவ இடத்தில் இறந்து போவது அடிக்கடி நிகழ்கிறது.
இந்நிலையில் கடந்த பட்ஜெட்டில் 100 கோடி செலவில் நமஸ்தே என்னும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் அறிமுகப்படுத்தியிருக்ககிறார். நமஸ்தே (National Action Plan for Mechanised Sanitation Ecosystem) என்னும் திட்டம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட இருக்கிறது.
நமஸ்தே திட்டத்தின் படி கழிவு நீர் அகரேற்றம் என்பது 100 சதவீதம் இயந்திரங்களை கொண்டு செய்யப்படும். இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் இயந்திரங்கள் மூலமாக கழிவு நீரை வெளியேற்றுவது, அடைப்பை சரி செய்வது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வெளியேற்றப்படும் கழிவு நீரை புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திடப்பொருளாக்கும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. நமஸ்தே திட்டத்தை மத்திய அரசின் சமூக நலத்துறை மேற்பார்வையில் நடைபெறவிருக்கிறது.
கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் பற்றிய விபரங்களை மத்திய அரசின் சமூக நலத்துறை சேகரித்துவருகிறது. பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வுகள் தரப்படவேண்டும். கழிவு நீர் அகற்றுவதற்கான முறையான கருவிகள் தரப்படவேண்டும்.
அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சிகள் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் தரப்படவேண்டும் என்று நெடுங்காலமாகவே தன்னார்வ
தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்திருக்கிறார்கள். நமஸ்தே திட்டம், அனைத்தையும் பரிசீலிக்கும் என்று நம்புவோம்!