விபத்து ஏற்படுத்தும் மோசமான டிரைவர்களில் இந்தியாவுக்கு 4வது இடம்

விபத்து ஏற்படுத்தும் மோசமான டிரைவர்களில் இந்தியாவுக்கு 4வது இடம்

உலக நாடுகளில் மோசமாக வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் கொண்ட நாடுகளில், இந்தியா நான்காவது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் போக்குவரத்திற்கு வாகனங்கள் அத்தியாவசியமானதாக மாறியுள்ளன. இந்நிலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலும் அதிகமாகி வருகிறது. தொடக்கத்தில் வீட்டிற்கு ஒரு இருசக்கர வாகனம் இருப்பதே அரிதாக இருந்த நிலையில், தற்போது ஆளுக்கு ஒரு இருசக்கர வாகனம் என்று முன்னேறியுள்ளனர். சில ஐரோப்பிய நாடுகளில் ஆளுக்கொரு கார் பயன்படுத்தும் அளவுக்கு முன்னேறியுள்ளனர்.

இந்நிலையில் முன் அனுபவமற்ற அல்லது அஜாக்கிரதையான ஓட்டுனர்களால் நாள்தோறும் உலகம் முழுவதும் ஏராளமான வாகன விபத்துகளும், உயிர்பலிகளும் ஏற்படுகின்றன.

இந்தியாவில் அதிகப்படியான மக்கள் தொகை காரணமாக நெரிசல் அதிகமாக இருக்கும். சாலை மார்க்கமாக வாகனத்தில் பயணம் செய்வது என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது. காரணம் வாகன ஓட்டிகள் பலருக்கு சாலை விதிகள் குறித்து எதுவும் தெரியாமலே வாகனங்களை ஓட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். இது ஒரு காரணம்.

மற்றொன்று.... பொறுமை இல்லாதது... குறித்த நேரத்தில் அலுவலகத்திற்கோ, அல்லது வேறு பல இடத்திற்கோ செல்ல வேண்டும் என்பதால் அடிக்கடி சாலை விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுகிறார்கள். இப்படி சாலை விதிகளை மீறுவதால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அடுத்தவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஒரு நொடி கவனக்குறைவு காரணமாக மிகப்பெரிய விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும்.

இந்நிலையில் லண்டனை தலைமையகமாக கொண்ட ‘கம்பேர் தி மார்கெட்’ என்ற காப்பீடு நிறுவனம், உலகிலேயே மோசமான ஓட்டுனர்களை கொண்ட நாடுகள் குறித்து அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அதன்படி வாகன விபத்துகள், அதற்கான காரணங்கள், போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் ஆகியவற்றை கணக்கிட்டு மோசமான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மோசமான வாகன ஓட்டுனர்களை கொண்ட நாடாக தாய்லாந்து முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 4 வது இடத்திலும், மலேசியா 5 வது இடத்திலும், அமெரிக்கா 7 வது இடத்திலும், கனடா, பிரேசில் 9, 10 வது இடத்திலும் உள்ளது.

அதேபோல சிறந்த ஓட்டுனர்கள் கொண்ட நாடுகள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் ஜப்பானும், இரண்டாவது இடத்தில் நெதர்லாந்தும், 3 வது இடத்தில் நார்வேயும், 5 வது இடத்தில் சுவீடனும் உள்ளன. ஆஸ்திரியா 6வது இடம், சிங்கப்பூர் 9 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சாலை பாதுகாப்பு
இந்தியாவில் சாலை பாதுகாப்பில் அதிகமான விபத்துகள் ஏற்படும் நகரமாக இந்திய தலைநகர் புதுடெல்லி உள்ளது. மேலும் இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் என அனைத்தும் அதிகப்படியான சாலை விபத்துகள் ஏற்படும் வரிசையில் உள்ளன.

முக்கிய நகரங்களில் குறைந்த விபத்துகள் ஏற்படும் பகுதிகள் உள்ள நகரமாக பெங்களுரு உள்ளது. சாலை நெரிசலுக்கு பெயர்போன பெங்களூரு நகரில் வேகமாக வாகனங்கள் இயக்க வழியே இல்லாதபோது எப்படி விபத்து நடக்கும் என்று இணையத்தில் பலர் கேலி செய்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com