இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடக்கிறது: ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரை!

இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடக்கிறது: ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரை!

இந்திய ஜனநாயக கட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்தி வருவதாக மத்திய அரசு மீது ராகுல்காந்தி கடும் விமர்சனங்களை கட்டவிழ்த்துள்ளார்.

லண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய அவர், இஸ்ரேலிய மென்பொருள் கருவி மூலம் தமது தொலைபேசி, அலைபேசிகள் உளவு பார்க்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீங்கள் எவருடனாவது தொலைபேசியில் பேசும்போது ஜாக்கிரதையாக இருக்கும்படி புலனாய்வுத்துறை அதிகாரிகள் தம்மிடம் எச்சரித்துள்ளதாகவும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி எம்.பி., கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் “21 ஆம் நூற்றாண்டில் கற்றல் முதல் கவனித்தல் வரை” என்னும் தலைப்பில் எம்.பி.ஏ. மாணவர்கள் பங்கேற்ற நிகழ்வில் உரையாற்றினார். அவரது உரையை காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் ஆலோசகருமான சாம் பிட்ரோடா யூட்யூப் மூலம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ராகுல் காந்தி பேச்சின் சாராம்சம் இதுதான்: “ எனது தொலைபேசியிலும் பெகாஸஸ் என்னும் உளவுக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான அரசியல்வாதிகளின் தொலைபேசிகளில் இந்த உளவுக்கருவி உள்ளது. புலனாய்வுத்துறை அதிகாரிகள் என்னிடம், நீங்கள் பிறரிடம் பேசும்போது ஜாக்கிரதையாக பேசுங்கள். ஏனெனில் உங்கள் பேச்சுக்கள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன” என்று என்னிடம் எச்சரித்துள்ளனர். எங்கள் மீது தேவையில்லாமல் பல கிரிமினல் வழக்குகள் போடப்பட்டுள்ளன. நாங்கள் அவற்றை சந்தித்து வருகிறோம்” என்று ராகுல் பேசியுள்ளார்.

அரசியல்வாதிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் தொலைபேசி உளவு பார்க்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அதுபற்றி விசாரிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது. எனினும் 29 அலைபேசிகளில் பெகாஸஸ் உளவுக் கருவி இருந்ததாக கண்டுபிடிக்கப்படவில்லை என்று குழு தெரிவித்த நிலையில், சிலவற்றில் உளவுக் கருவிகள் இருந்தது தெரியவந்தது.

இந்த குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த உச்சநீதிமன்ற அமர்வு, 29 அலைபேசிகளில் மென்பொருள் கருவி இல்லை என்றும், ஐந்து அலைபேசிகளில் உளவுக்கருவி இருந்ததாகவும் தொழில்நுட்ப குழு தெரிவித்துள்ளது கவலை அளிக்கிறது என்று கூறியிருந்தது. ஆனால், அவை பெகாஸஸ் உளவுக்கருவி என சொல்லமுடியாது என்று தொழில்நுட்பக் குழு கூறியது.

நாட்டில் நாடாளுமன்றம், பத்திரிகை, நீதித்துறை மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவது பற்றி அனைவருக்கும் தெரியும். நான் இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறேன். ஜனநாயகம் நிலைப்பெற வேண்டுமானால் நாடாளுமன்றம், பத்திரிகைகள், நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டுமானால் அதற்கான கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும். ஆனால், அவை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எனவேதான் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக கூறுகிறேன் என்றார் ராகுல் காந்தி.

நாடாளுமன்றத்தின் முன் நின்றுகொண்டு சில பிரச்னைகளை எழுப்பியதற்காகவும் பேசியதற்காகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இது ஒருமுறை அல்ல மூன்று நான்கு முறை நடந்துள்ளது. எதிர்க்கட்சியினர் மீது வன்முறை கட்டவிழ்த்துப்படுவதை நீங்கள் படங்களாகவும் செய்திகளாகவும் பார்த்திருக்கலாம் அல்லது படித்திருக்கலாம். இந்தியாவில் நடப்பது என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இதைக்கூறுகிறேன் என்றார் ராகுல்காந்தி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com