சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

பவர் ஸ்டார், சூப்பர் ஸ்டார் ஆகியோரின் சந்திப்புகளுடன் - தெலுங்கு தேசம், தேர்தலுக்குத் தயாராகிவிட்டதா?

இரண்டு ஆண்டுகளாகவே சந்திரபாபு நாயுடுவுக்கு நேரம் சரியில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் ஜெகன்மோகன் அரசின் அரசியல் அழுத்தங்களை அவரது கட்சியால் எதிர்கொள்ள முடியவில்லை. அவரது சொந்த தொகுதியான குப்பம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் படு மோசமாக தோல்வியடைந்தது.

சென்ற ஆண்டு சட்டமன்றத்தில் பேசும்போது கண்கலங்கிவிட்டார். தன்னுடைய மனைவி, குடும்பம் குறித்து ஆளுங்கட்சியிர் தவறாக பேசுவதாக ஆளுங்கட்சியினர் மீது வருத்தப்பட்டார். 2019ல் ஆட்சியை பறிகொடுத்தபின்னர், தெலுங்கு தேசம் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் புத்தாண்டு, சந்திரபாபு நாயுடுவுக்கு நம்பிக்கை தந்திருக்கிறது. கடந்த இரண்டு நாட்களில் இரு முக்கியமான சந்திப்புகள் நடந்திருக்கின்றன. இதனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தெலுங்கு தேசத்தின் வியூகம் குறித்த விவாதங்கள் ஆரம்பித்திருக்கின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்னர் சிரஞ்சீவியின் தம்பியும், ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடுவை தேடி வந்து சந்தித்தார். அரசியல் ஆர்வமுள்ள நடிகர் பவன் கல்யாண், ஆந்திராவில் மாற்றம் பற்றி பேசி வந்தார். எந்தவொரு கட்சியோடும் கூட்டணி சேரப்போவதில்லை என்று தொடர்ந்து பேசி வந்தார். அவரது கூட்டங்களுக்கு மக்கள் திரண்டு வந்தார்கள். ஆனால், வாக்குதான் கிடைக்கவில்லை.

பவன் கல்யாண் சந்திப்பைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியுடன் அவரது ஜன சேனா கூட்டணி சேரப்போவதாக செய்திகள் வருகின்றன. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தல்களும் நடக்கவிருக்கின்றன. இதுவரை தெலுங்கு தேசம் கட்சியை தவிர்த்து வந்த பவன் கல்யாண் திடீரென்று தேடி வந்தது அரசியல் வட்டாரத்தை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

சந்திப்பு தந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த சந்திப்பு அரங்கேறியிருக்கிறது. படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் வந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியை, சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசியிருக்கிறார். நெருங்கிய நண்பரும் தலைவருமான ரஜினியை சந்தித்து மகிழ்ச்சி அளிப்பதாக டிவிட்டரில் போட்டோவை பகிர்ந்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, ரஜினியும் நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்திர பாபு நாயுடுவை சந்தித்து பேசியதாகவும் நல்ல ஆரோக்கியத்தோடும், அரசியல் வாழ்க்கையில் அடுத்து பெரிய வெற்றி பெறவும் வாழ்த்துவதாக ரஜினியும் டிவிட்டர் செய்தி வெளியிட்டிருக்கிறார்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் லட்சுமி சிவபார்வதியுடனான மோதலால் தன்னுடைய மாமனாரான என்.டி,ஆரிடமிருந்து சந்திரபாபு நாயுடு ஆட்சியைக் கைப்பற்றினார். அப்போது அவருக்கு ரஜினி உறுதுணையாக இருந்தார். என்.டி.ஆர் குடும்பத்தினரிடையே இருந்த சிக்கலில் நடுநிலையாக இருந்து பிரச்னைகளை தீர்த்து வைத்தார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணிக்கு பவர் ஸ்டார் பவன் கல்யாணும், சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஆதரவு தருவார்களா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. பார்க்கலாம்!

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com