
திருப்பதி மலையில் உள்ள ஒரு டீ கடையில் T என்ற வார்த்தை சிலுவை போன்று உள்ளதாக எழுந்த சர்ச்சையில் டீ கடையை மூடி விளக்கம் அளிக்க திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருப்பதி மலையில் வேறுமத பிரச்சாரம், வழிபாடு,குறியீடுகளுடன் கூடிய பொருட்களை விற்பனை செய்வது, பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு தீவிர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பதி மலையில் உள்ள டீக்கடை ஒன்றில் சிலுவை குறியுடன் கூடிய டீ கப்புகள் பயன்படுத்தப்படுவதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் அங்கு சென்ற தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் இந்த டீ கப்புகள் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று விசாரணை நடத்தினர். அப்போது திருப்பதி மலையில் உள்ள மொத்த விற்பனை கடை ஒன்றில் வாங்கியதாக டீ கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் அங்கு சென்று தேவஸ்தான சுகாதாரத் துறையினர், விஜிலன்ஸ் துறையினர் ஆகியோர் சோதனை செய்தனர். அப்போது அந்த கடையில் சிலுவை குறியீடுடன் கூடிய டீ கப்புகள் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து கடையை மூட உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள் நாளை விஜிலன்ஸ் அலுவலகத்திற்கு வந்து விளக்கம் அளிக்க கடை உரிமையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.