என்னது ஜிபே,பேடிஎம் டிரான்ஸ்பர் செய்தால் கட்டணமா? கட்டணம் வசூலிக்க நிர்பந்திக்கும் வங்கிகள்!
இன்று பெரும்பாலான பண பரிவர்த்தனைகள் ஜிபே வழியாக நடைபெறுகின்றன. கூடவே பேடிஎம், அமேஸான்பே, போன்பே என ஏகப்பட்ட ஆப் வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனை கொரானா தொற்றுக்கு பின்னர் உச்சத்திற்கு சென்றது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அரசும், சம்பந்தப்பட்ட வங்கிகளும் ஊக்கப்படுத்திய காலமும் உண்டு.
கடந்த மூன்றாண்டுகளாக ஜீரோ சார்ஜ் பிரேம்வொர்க் என்பதை மத்திய அரசு கட்டாயப்படுத்தியிருக்கிறது. அதாவது யூபிஐ மூலமாக மேற்கொள்ளப்படும் அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும் தனியாக கட்டணம் விதிக்கக்கூடாது.
கோடக் மஹிந்திரா வங்கி, 30 பரிவர்த்தனைகளுக்கு பின்னர் ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் ரூபாய் 2.50 விதிக்க முடிவு செய்தார்கள். ஒரு சில வங்கிகள் ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்க வேண்டும என்றார்கள். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 5 ரூபாய் + 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கவும் திட்டங்கள் இருந்தன.
இந்நிலையில் ஆறு மாத காலத்தில் 90 முறைக்கு மேல் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் வசூலிக்க சில வங்கிகள் முடிவு செய்திருக்கின்றன. மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான டிஜிட்டல் செயலியான பீம் செயலியை நீங்கள் பயன்படுத்தினால் எந்தக் கட்டணமும் இல்லை. ஆனால், ஜிபே, பேடிஎம், போன்பே போன்றவற்றில் டேர்ம்ஸ் தனியாக குறிப்பிட்டிருப்பார்கள்.
அனைத்து வங்கிகளும் கட்டணம் விதிக்கப்போவதில்லை. கட்டணம் விதிப்பது என்பது வங்கியின் முடிவைப் பொறுத்தது. இதற்கு போர்ட்போலியா சார்ஜ் என்னும் பெயரில் வசூலிக்கலாம் என்கிறார்கள். அனைத்து வங்கிகளுக்கும் ஒரே விதமான போர்ட்போலியா கட்டணமும் இருக்கப்போவதில்லை.
ஆறு மாதங்களில் 90 முறை இலவசமாக யூபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளமுடியும். 91வது முறையில் இருந்து கட்டணம் விதிக்கப்படும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 2 ரூபாய் என்று தீர்மானிக்கப்பட்டால் ரூ 2 + வரி விதிக்கப்படலாம். இல்லாவிட்டால் எந்த மாதங்களில் அதிக பரிவர்த்தனைகள் செய்யப்படுகிறதோ, அந்த மாதத்தில் மட்டும் கட்டணம் என்று கூட முடிவு செய்யப்படலாம்.
கட்டணம் விதிப்பது பற்றி எந்தவொரு வங்கியும் இதுவரை ஒரு முடிவுக்கு வரவில்லை. வாடிக்கையாளர்கள் மத்தியில் எந்தளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பது குறித்த கவலைகளால் முடிவெடுப்பதை தள்ளிப்போட்டிருக்கின்றன. எது எப்படி இருந்தாலும், மத்திய அரசு இதில் தலையிடப்போவதில்லை என்பது மட்டும் தெரிகிறது.