பெரும்பாலான இந்தியர்களுக்கு இதய நோய்கள் ஏற்படக் காரணமே இதுதான்?

பெரும்பாலான இந்தியர்களுக்கு இதய நோய்கள் ஏற்படக் காரணமே இதுதான்?

பெரும்பாலான இந்தியர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கு, ரத்தத்தில் அதிகமாகக் காணப்படும் ஹோமோசிஸ்டின் அளவுதான் காரணம் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சில காலமாகவே இந்தியாவில் எல்லா வயதினரும் இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கும் நிலை அதிகரித்துள்ளது. இதற்குப் பலராலும் பலவிதமான காரணங்கள் கூறப்பட்டாலும், இதய நோய்கள் ஏற்படுவதற்கு குறிப்பிட்டு சொல்லும்படியான காரணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு ரத்தத்தில் ஒரு குறிப்பிட்ட காம்பவுண்டின் அளவு அதிகமாக இருக்கிறதாம். 

Tata 1mg Labs வெளியிட்ட அறிக்கையில், 66% இந்தியர்களுக்கு ரத்தத்தில் 'ஹோமோசிஸ்டின்' என்ற காம்பவுண்டின் அளவு அதிகமாக இருப்பதென்றும்  அதுவே இதயம் சார்ந்த நோய்கள் அதிகரிக்கக் காரணமாக அமையக்கூடும் என்றும் இதய நோய் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். ஹோமோசிஸ்டின் என்பது ஒரு அமினோ அமிலமாகும். இது ரத்தத்தில் அதிகமாக இருந்தால், வைட்டமின் பி6, வைட்டமின் பி9 மற்றும் வைட்டமின் பி12 ஆகிய முக்கிய வைட்டமின்களின் அளவு குறைந்துவிடுமாம். 

சராசரியாக ஒரு நபருக்கு, ஒரு லிட்டர் ரத்தத்தில் 5 முதல் 15 மைக்ரோமோல்ஸ் அளவுக்கு ஹோமோசிஸ்டின் இருக்க வேண்டும். இதன் அளவு 50ஐ விட அதிகரித்தால், இதயத்தின் ஆர்ட்டரிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஹோமோசிஸ்டின் அளவு கூடுவதால் இதய நோயின் அபாயம் அதிகரிக்கும் என்கிறார்கள். 

ரத்தத்தில் ஹோமோசிஸ்டின் அளவு அதிகமாக இருப்பதை சில அறிகுறிகள் மூலம் அறியலாம். மயக்கம், வாய்ப்புண், வெளுரிய சருமம், பலவீனமாக உணர்வது, மூச்சு திணறல் மற்றும் மனநிலையில் அடிக்கடி மாற்றம் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ச்சியாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. Pulmonary Embolism மற்றும் Deep vein thrombosis போன்ற இதய நோய்களுக்கு ஹோமோசிஸ்டின் அளவு அதிகரிப்பது முக்கிய காரணம் என்றும் கூறுகிறார்கள். 

ஆனால் இதன் அளவு அதிகரித்தால் மாரடைப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு இதுவரை தெளிவான பதில் கிடைக்கவில்லை. 

"சரி, ஹோமோசிஸ்டின் அளவு அதிகரிப்பது தானே பிரச்சனை. அதை நாங்கள் குறைத்துக் கொண்டால் எந்த பாதிப்பும் இல்லை தானே" என சிலருக்கு கேள்வி எழும்பும். அதிகமாக இருக்கும் அளவைக் குறைப்பதற்கு உத்திரவாதம் அளிக்கும் எவ்வித தரவுகளும் இதுவரை இல்லை. என்னதான் மருத்துவர்கள் இந்த பிரச்சனைக்கு வைட்டமின் ஊட்டச்சத்துக்களை பரிந்துரை செய்தாலும், அதை உட்கொள்வதால் ஹோமோசிஸ்டின் அளவு குறையும் என உறுதியளிக்க முடியாது எனக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 

எனவே முடிந்தவரை ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, இதய நோய்களிலிருந்து தப்பிப்பதற்கு நம்மால் முடிந்த செயல்களை செய்து வருவோம். 

கவனிக்க: இக்கட்டுரை ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட செய்திகளிலிருந்து தொகுக்கப் பட்டது. வெறும் சோதனை முடிவுகளை வைத்து, ஹோமோசிஸ்டின் அளவு உங்களுக்கு அதிகமாக இருந்தால் எதிர்காலத்தில் இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு வரும் என எந்த முடிவுக்கும் வரவேண்டாம். தகுந்த மருத்துவரை அணுகி உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com