உத்தரகண்டில் மண்ணில் புதையும் ஜோஷிமத், விரிசலில் வீடுகள்

உத்தரகண்டில் மண்ணில் புதையும் ஜோஷிமத், விரிசலில் வீடுகள்

உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதைந்து வரும் ஜோஷிமத் நகரில் ஆபத்தான கட்டடங்களில் வசிக்கும் 600 குடும்பங்களை வெளியேற்ற மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், ஹேமகுண்ட் சாஹிப் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு நுழைவு வாயிலாக இருப்பது ஜோஷிமத் நகரம்.

இமயமலையின் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த நகரத்தில் நிலநடுக்கங்களும், நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுவது வழக்கமானது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு திடீரென ஜோஷிமத்தின் ஒருபகுதி பூமிக்குள் புதையத் தொடங்கியது. அங்குள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளன. எந்த நேரத்திலும் அவை இடிந்து விழக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

பெரும்பாலான வீடுகளிலிருந்து மக்கள் வெளியேறிவிட்டாலும் சிலர் இன்னும் அங்கேயே தங்கியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக விரிசல் ஏற்பட்டிருந்த கோயில் ஒன்று வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது. அங்கு விரிசல் ஏற்பட்டிருந்த்தால் மக்கள் யாரும் அந்த கோயிலுக்குச் செல்லவில்லை. இதனால் உயிர்ப்பலி ஏதும் இல்லை.

இந்நிலையில் ஜோஷிமத் நகரத்திலிருந்து 600 குடும்பங்களை உடனடியாக வெளியேற்றுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து வெளியேறும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். மெல்ல மெல்ல புதைந்து வரும் ஜோஷிமத் நகரத்தை பேரிடர் மீட்புப் படையினர் கண்காணித்து வருகின்றனர். மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தை அடுத்து ஜோஷிமத் மண்ணில் புதைந்து வருவதற்கான காரணம், அதனால் ஏற்படும் தாக்கம் பற்றி ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய நீர் ஆணையம், தேசிய தூய்மை கங்கை திட்டம், இந்திய புவியியல் ஆய்வுத்துறை உள்ளிட்டவற்றின் நிபுணர்குழுவை ஜல்சக்தி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. இந்த குழு 3 நாள்களில் அறிக்கை அளிக்கும் எனத் தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com