கர்நாடக சட்டமன்றத் தேர்தல் - குமாரசாமியோடு கைகோர்க்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்!
கர்நாடகாவில் மூன்று மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பா.ஜ.க தரப்பில் ஏற்கனவே பிரச்சாரம் ஆரம்பமாகிவிட்டது. டெல்லியிலிருந்து தினமும் ஒரு தலைவர்கள் பெங்களூருக்கு வந்துவிடுகிறார்கள். காங்கிரஸ் கட்சியோ களத்தில் தொண்டர்களை திரட்டும் பணியில் இருக்கிறது.
கர்நாடகாவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கிறது. பல இடங்களில் பா.ஜ.கவை விட சற்றே முன்னணியில் இருப்பது காங்கிரஸ் கட்சிதான். ஆனால், காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை குறிவைத்து களத்தில் சவாலாக இருப்பது, குமாரசாமியின் ஜனதா தளம்தான்.
இந்நிலையில் தெலுங்கானாவின் டி.ஆர்.எஸ் கட்சி, தேசியக் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. பா.ஜ.கவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மாற்று சக்தியாக வரப்போவதாக சந்திரசேகர் ராவ் உறுதியுடன் இருக்கிறார்.
சமீபத்தியில் பி.ஆர்.எஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் அல்லாத பிற எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. ஆனால், குமாரசாமி பங்கேற்கவில்லை. பாதயாத்திரையில் மேற்கொண்டிருப்பதால் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது.
கர்நாடாகாவில் குமாரசாமியோடு கைகோர்க்கும் முயற்சிகளில் சந்திரசேகர் ராவ் இறங்கியிருக்கிறார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் இருவரும் இணைந்து போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
கே.கே பகுதி என்னும் பழைய ஹைதராபாத் மாகாணத்தின் பகுதிகளில் கூட்டணியாக களமிறங்குகிறார்கள். தெலுங்கானா மற்றும் ஆந்திர எல்லையோரமுள்ள சட்டமன்ற தொகுதிகளில் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
மண்ணின் மைந்தர்கள் என்கிற அடையாளத்தோடு களம் காணும் ஜனதா தளத்திற்கு இது சிக்கல்களைத்தான் ஏற்படுத்தும். பா.ஜ.கவும் வேண்டாம், காங்கிரஸ் கட்சியும் வேண்டாம் என்று நடுநிலையாக இருந்தால் மட்டுமே தங்களுடைய தனித்தன்மையை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பது சரிதான்.
நடுநிலையாக இருப்பதில் குமாரசாமிக்கும் சந்திரசேகர் ராவுக்கும் மாநில அளவில் பலன்கள் உண்டு. அதற்காக தேசியக் கட்சிகளுடன் இணைந்து செயல்படாமல் ஏன் பொருந்தா கூட்டணி அமைக்க வேண்டும்? தெலுங்கானா ஆட்கள் ஏன் கர்நாடக அரசியலில் தலையிடவேண்டும் என்று கொதிக்கிறார்கள், உள்ளூர் விமர்சகர்கள்.