கர்நாடக சட்டமன்றத் தேர்தல்: ஜனதா தளத்தின் அரசியல் கணக்கை முறியடிக்குமா பா.ஜ.கவின் சி.டி ரவி-அண்ணாமலை வியூகம்?
கர்நாடகாவில் மாநிலக்கட்சிக்கு எப்போதும் மூன்றாவது இடம்தான். தென்னிந்தியாவிலேயே இங்கு மட்டும் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. தேவகௌடா, குமாரசாமி போன்ற பிரபலமான மாநில தலைவர்கள் இருந்தாலும் ஜனதா தளத்தில் தேசியக் கட்சிகளோடு போட்டியிடாத நிலைதான் நிலவி வருகிறது.
ஜனதா தளம், கிங் மேக்கரா வருமா? கர்நாடகாவில் எப்போது சட்டமன்றத் தேர்தல் நடந்தாலும் தவறாமல் இடம் பெறும் கேள்வி. கடந்த கால அரசியல் வரலாற்றில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில்தான் கேள்வி தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
2004ல் மட்டுமல்ல 2018ல் கூட ஒரு முறை ஜனதா தளத்திற்கு கிங் மேக்கராக வரும் வாய்ப்பு கிடைத்தது. காங்கிரஸ் கட்சியோடும், பா.ஜ.கவுடனும் ஒரு வலுவான கூட்டணியை அமைத்திருந்தால் ஜனதா தளத்தால் ஆட்சியில் நீடித்திருக்க முடியும். ஆனால், எந்தக் கூட்டணிக்கும் ஜனதா தளம் உண்மையாக நடந்து கொண்டதில்லை.
ஜனதா தளத்தின் ஆதார வாக்கு வங்கி, ஒக்கலிகர் சமூக ஓட்டுகள்தான். ஹசன், மாண்டியா மாவட்டங்களில் ஜனதா தளத்தின் செல்வாக்கு அதிகம். இம்முறை ஜனதா தளத்திற்கான ஆதரவு எப்படியிருக்கும்? தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் ஜனதா தளம் யாருடன் கூட்டணி வைத்துக்கொள்ளும்? பா.ஜ.கவா அல்லது காங்கிரஸ் கட்சியா? யாருக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள்? இதெல்லாம் இன்னும் விடை தெரியாத கேள்விகள்.
இம்முறை தொங்கு சட்டமன்றம் வர வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். அப்படியென்றால் ஜனதா தளத்தின் பங்கு அதிகமாக இருக்கும். அப்படியொரு நிலை வந்தால் நிச்சயமாக பா.ஜ.கவும் காங்கிரஸ் கட்சியும் தவிர்க்கவே நினைப்பார்கள். ஜனதா தளத்திற்கு நெருக்கடி வரும் நிலையும் ஏற்படலாம்.
ஜனதா தளத்தை விமர்சிப்பதை காங்கிரஸ் கட்சி எப்போதே நிறுத்திவிட்டது. ஆனால், பா.ஜ.கவோ அரசியல் களத்தில் ஜனதா தளத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. தேர்தலுக்குப் பின்னர் கூட ஜனதா தளத்தோடு கூட்டணி சேர பா.ஜ.க விரும்பவில்லை என்று தெரிகிறது.
சமீபத்தில் அமித்ஷா பங்கேற்ற பிரச்சாரக்கூட்டத்தில், ஜனதா தளத்திற்கு நீங்கள் அளிக்கும் வாக்கு என்பது காங்கிரஸ் கட்சிக்கு அளிப்பதாகும் என்று பேசியிருந்தார். கர்நாடக பா.ஜ.க, ஒருமுறை அல்ல பலமுறை ஜனதா தளத்தை விமர்சித்திருக்கிறது.
ஜனதா தளத்தின் செல்வாக்கு மிக்க பகுதிகளில் குறிப்பாக மாண்டியா மாவட்டங்களில் பா.ஜ.க ஏராளமான பொதுக்கூட்டங்களை நடத்தியிருக்கிறது. பா.ஜ.க தடுமாறும் இடங்களும் உண்டு. மைசூர் பகுதியைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் பா.ஜ.க இன்னும் வளரவில்லை. இங்கு ஒக்கலிகர்கள் சமூகம்தான் பெரும்பான்மையானவர்களாக இருக்கிறார்கள்.
ஒக்கலிகர்கள், தொடர்ந்து ஜனதா தளத்திற்கே வாக்களித்து வந்திருக்கிறார்கள். படித்தவர்கள் நிரம்பியுள்ள பெங்களூர் பகுதியில் கூட ஒக்கலிகர்கள் சமூகம் ஜனதா தளத்திற்கே வாக்களிக்கிறார்கள். அவர்களது வாக்குகளை பா.ஜ.க பக்கம் திருப்புவதுதான் சவாலான விஷயம்.
பா.ஜ.கவின் வியூகத்தை கர்நாடகாவில் செயல்படுத்தப்போகிறவர்கள் நமக்கு தெரிந்த முகங்கள்தான். கர்நாடகாவை விட தமிழ்நாட்டில் பிரபலமான சி.டி. ரவி கூட ஒக்கலிக சமூகத்தைச் சேர்ந்தவர். அவரோடு அவரது நண்பரான தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் டெல்லி மேலிடம் களமிறக்கியிருக்கிறது. வியூகம், வெற்றி தருமா?