கர்நாடக காங்கிரஸ்: யார் முதல்வர் வேட்பாளர்?  ஆரம்பமானது, கோஷ்டி பூசல்

கர்நாடக காங்கிரஸ்: யார் முதல்வர் வேட்பாளர்? ஆரம்பமானது, கோஷ்டி பூசல்

ர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் வர ஆரம்பித்துள்ளன. முதல் கட்ட கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மாநிலம் முழுவதிலிருந்தும் உற்சாகமளிக்கும் வகையில் செய்திகள் வருவதால் காங்கிரஸ் தொண்டர்கள் சுறுசுறுப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் உற்சாகத்தைக் குலைக்கும் வகையில் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யும் கோஷ்டி பூசல் ஆரம்பமாகியுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் கட்சி, ஏற்கனவே 124 இடங்களில் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. எஞ்சியுள்ள 100 இடங்களுக்கான வேட்பாளர்களை தீர்மானிக்கவும், 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்த ஆலோசனை செய்வதற்காகவும் டெல்லியில் நேற்று முன்தினம் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் டெல்லிக்கு வந்திருந்தார்கள்.

டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சித்தராமையா, முதல்வர் பதவிக்கான வேட்பாளர் போட்டியில் நானும், டி.கே சிவக்குமாரும் இருக்கிறோம். இது தவறு எதுவுமல்ல. சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக் கப்படும் எம்.எல்.ஏக்கள் முதல்வர் யாரென்பதை முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

பேட்டி பற்றிய செய்திகள் வெளியானதும், அவசர அவசரமாக அதை மறுத்து ஏனோ ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.  முதல்வர் வேட்பாளர் பற்றி நான் குறிப்பிடாத கருத்துக்கள் வெளியாகியிருப்பதாக மறுத்திருக்கிறார்.  அதன் பின்னணியில் நடந்த விஷயங்கள் பற்றி டெல்லி வட்டாரங்கள் ஏராளமான செய்திகளை பகிர்கிறார்கள்.

சித்தாராமையாவின் போக்கில் காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்திருக்கிறது. முதல்வர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்கு முன்னர் எதுவும் பேசக்கூடாது என்பதையே காங்கிரஸ் மேலிடம் கொள்கையாக வைத்திருக்கிறது.  இந்நிலையில் தேவையில்லாமல் முதல்வர் வேட்பாளர் குறித்து பேசி, சர்ச்சையாக்கி விட்டார் என்று  வருத்தப்படுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சிக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சோதனைக்காலமாக அமைந்துவிடும் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள். ஆட்சிக்கு சித்தாராமையா, கட்சிக்கு டி.கே சிவக்குமார் என்பதுதான் சரியான பார்முலாவாக இருக்க முடியும். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில் அப்படித்தான் இருக்கிறது. அதே பார்முலா கர்நாடகாவிலும் இருக்கவேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகளும் விரும்புகிறார்கள்.

எது எப்படியிருந்தாலும் முதல்வர் வேட்பாளரை  நேரு குடும்பம்தான் நியமிக்கும். ஆனால், சமீப காலங்களில் மேலிடம் எடுத்த முடிவுகள் அனைத்தும் கட்சிக்கு சாதமாக அமையவில்லை. பஞ்சாப் தேர்தலின் போது சித்துவை முன்னிறுத்தியதால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ராஜஸ்தானில் அசோக் கெலாட்டை நகர்த்திவிட்டு ராஜேஷ் பைலைட்க்கு முதல்வர் வாய்ப்பு தரவேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் தந்த அழுத்தத்தை அசோக் கெலாட் ஏற்றுக் கொள்வில்லை.

வெற்றிப்பாதையில் உள்ள கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் உற்சாகத்தை குறைக்கும் வகையில் முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் முடிவெடுத்துவிடக்கூடாது என்று காங்கிரஸ் தலைமை கவனமாக இருக்கிறது. கர்நாடகாவை சேர்ந்த கார்கே, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக இருப்பதால் இம்முறை கள யதார்த்தத்தை உணர்ந்து சரியான முடிவெடுக்க வேண்டியிருக்கும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com