கர்நாடகா தேர்தல் எதிரொலி. சேலத்தில் வெள்ளிப் பொருட்கள் உற்பத்தி  குறைந்தது.

கர்நாடகா தேர்தல் எதிரொலி. சேலத்தில் வெள்ளிப் பொருட்கள் உற்பத்தி குறைந்தது.

சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப் பொருட்களுக்கு எப்போதுமே உலகமெங்கும் மவுசு அதிகம். குடிசைத்தொழிலாக சேலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக வெள்ளித்தொழில் உள்ளது. எப்போதும் தடையின்றி மாநிலங்கள் தோறும் பயணிக்கும் வெள்ளிக்கு கர்நாடகத் தேர்தலினால் தற்போது சிறு முடக்கம் எழுந்துள்ளது. இதனால் வெள்ளித் தொழிலாளர்கள் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.   

கர்நாடக தேர்தல் காரணமாக சேலத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு வெள்ளி பொருட்கள் விற்பனைக்கு கொண்டு செல்வது குறைந்துள்ளது. இதன் காரணமாக சேலத்தில் வெள்ளி பொருட்கள் உற்பத்தி 30 சதவிகிதம் வரை சரிந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். சேலத்தில் செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, நெத்திமேடு, பள்ளப்பட்டி, சௌதாபுரம், பனங்காடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளிப்பட்டறைகள் உள்ளன இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.

வெள்ளி கால் கொலுசுகள் முதல் குழந்தைகளுக்கான அரைஞாண் கொடி. உள்பட பல்வேறு பொருட்கள் வெள்ளியில் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது தங்க நகைகளுக்கு ஈடாக வெள்ளியில் நவீன செயின் போன்றவைகளும் செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி  வடமாநிலங்களிலும் சேலம் வெள்ளிக்கு எப்போதுமே கிராக்கி  உள்ளது. கடந்த பொங்கல் பண்டிகைக்கு முன்பு வெள்ளி பொருட்கள் உற்பத்தி விற்பனை நல்ல முறையில் இருந்தது. இதனால்  கடந்த தை, மாசி மாதத்தில் விற்பனை பல மடங்கு அதிகரித்தது. இதனால் வெள்ளித் தொழிலில் ஈடுபட்டவர்கள் மகிழ்வாக இருந்தனர்.

ஆனால் தற்போது கர்நாடகத்தில் தேர்தல் அறிவித்த பின் சேலத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு வெள்ளி பொருட்கள் கொண்டு செல்வது குறைந்துள்ளது. இதனால் சேலத்தில் வெள்ளி பொருட்கள் உற்பத்தியும் சரிந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர்கள் நலசங்க தலைவர் கூறியதாவது.

சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெள்ளிப் பொருட்கள் உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் உள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு பிறகு வெள்ளி பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. அவ்வப்போது உற்பத்தி செய்யப்பட்ட வெள்ளி பொருட்களை தமிழகத்தில் பல பகுதிகளுக்கும் வட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வந்தோம். இந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தேர்தல் கட்டுப்பாடு அமலுக்கு வந்த பின் வாகன சோதனையில் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப் பொருட்கள் பெரும்பாலும் ரயில் மற்றும் காரில்தான் வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். தமிழகத்தில் இருந்த செல்லும் 40%  ரயில்கள் கர்நாடகா வழியாகவும் 30%  ரயில்கள் ஆந்திரா வழியாகவும் மீதமுள்ள 20% ரயில்கள் கேரளா வழியாக செல்கிறது. ரயில் மற்றும் காரில் எந்த வழியாக வெள்ளிப்பொருட்களை கொண்டு சென்றாலும் தேர்தல் அதிகாரிகள் சோதனை இடுகின்றனர்.

முறையான ஆவணங்கள் இருந்தாலும் சில நேரங்களில் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக வட மாநிலங்களுக்கு வெள்ளி பொருட்கள் கொண்டு செல்வது குறைந்துள்ளது. சேலத்தில் உள்ள வெள்ளி பட்டறைகளில் ஒரு மாதமாக உற்பத்தி 50% வரை சரிந்துள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பட்டறைகளில் வெள்ளிப் பொருட்கள் உற்பத்தி நடக்கிறது வெள்ளிப் பொருட்கள் உற்பத்தி சரிவால் தொழிலாளர்களுக்கு வருவாய் குறைந்துள்ளது.” என்றார்.

தங்கம் வெள்ளியின் விலையை பொருத்தமட்டில் சர்வதேச மார்க்கெட்தான் நிர்ணயிக்கிறது. இதன் காரணமாக பல ஆண்டாக தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் தற்போது சூடான் உள்பட சில நாடுகளில் போர் நடப்பதால் தங்கத்தின் இறக்குமதி குறைந்துள்ளது. இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும்  அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ வெள்ளி 75 ஆயிரத்துக்கு விற்றது படிப்படியாக கிலோவுக்கு ரூபாய் 5 ஆயிரம் அதிகரித்து நேற்றே நிலவரப்படி 80,000 எனக் கூடியது வெள்ளியை ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து நீக்கினால் தானாக வெள்ளியின் விலை சரிந்து விடும் என்றும் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

தேர்தல்களினால் பெருமளவில் பாதிக்கப்படுபவர்கள் இவர்களைப் போன்ற சிறு தொழில் செய்பவர்களே என்பதற்கு இந்த செய்தியினால் அறியலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com