மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான ஆய்வு பணியை தொடங்கியது கர்நாடகா அரசு!

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முதல் கட்ட ஆயத்தப் பணியை கர்நாடக அரசு தற்போது தொடங்கியுள்ளது.

கர்நாடகாவின் குடகுமலையில் உற்பத்தியாகும் காவேரி நீர் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு பயன் தருகின்றது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்காக கர்நாடகா அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

அணை இல்லாத சமயத்திலேயே கர்நாடகா உரிய அளவில் காவேரி நீரை பங்கிட்டு தருவதில்லை, அணை கட்டப்பட்டு நீர் தேக்கப்பட்டால் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீர் முற்றிலுமாக நிறுத்தப்படும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் மேகதாதில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசு மேகதாதுப் பகுதியில் அணை கட்டுவதற்கு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்காக 9 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க முடிவு செய்துள்ளது. இதற்கான விரைவு அறிக்கை தயாரித்து நீர்வளத் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் அணை கட்டுவதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

அதேசமயம் தமிழ்நாடு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் காவேரி மேலாண்மை வாரியம் கூட்டத்தில் அணை பற்றி பேச தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

இதை அடுத்து தற்போது கர்நாடகா அரசு அணை கட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, அணையை சுற்றியுள்ள மரங்கள் கணக்கெடுப்பு, வனப்பயிர்கள் கணக்கெடுப்பு, வன உயிர்கள் கணக்கெடுப்பு, நிலம் அளவிடும் பணி ஆகியவற்றை தொடங்கியுள்ளது. இந்த பணியை இரண்டு மாதங்களுக்குள் முடிப்பதற்கு கர்நாடகா அரசு முடிவு எடுத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com