காசி தமிழ் சங்கமம்: தமிழகத்திலிருந்து செல்லும் முதல் குழுவை ஆளுநர் வழியனுப்புகிறார்!

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம்

காசியில் நாளை மறுநாள் (நவம்பர் 19) பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்படும் காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழ்நாட்டிலிருந்து ரயிலில் செல்லும் முதல் குழுவை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

 இந்தியாவின் 75-வது சுதந்திரவிழா கொண்டாட்டத்தின் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக  காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. காசிக்கும் தமிழுக்கும் இருக்கும் பழமையான நாகரீக தொடர்பை உணர்த்தும் வகையில் வாரணாசியில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அந்த வகையில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி இணைந்து நடத்தும் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. இந்த சங்கமம் நிகழ்ச்சியில் நாட்டின் கலாச்சார நகரங்களின் பன்முகத் தன்மை மற்றும் கல்வி சார்ந்த உரையாடல்கள், கருத்தரங்குகள் மற்றும் விவாதங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தில் பங்கேற்பதற்கு https://kashitamil.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 210 பேர் ஒரு குழுவாக 8 நாட்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். சுமார் 2500 பேர் கொண்ட அத்தகைய 12 குழுக்கள் ஒரு மாத காலத்திற்கு காசியில் தங்கியிருந்து நிகழ்வில் பங்கேற்கும்.

இணையத்தில் பதிவு செய்யபவர்களில் இருந்து 2,500 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் பங்கேற்பாளர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். அவர்களின் பயணச் செலவு, தங்கும் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும்.

இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்களில் 2,592 பேர் பயணம் மேற்கொள்ள உள்ளனர். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் இருந்து 216 பேர் கொண்ட முதல் குழு வாரணாசிக்கு ரயில் மூலம் செல்ல இருக்கிறது.

எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இக்குழுவினருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடி கொடியசைத்து அவர்களை அனுப்பி வைக்கிறார். மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் எல்.முருகனும் அந்த நிகழ்வில் பங்கேற்க இருக்கிறார்.

 இந்த நிலையில் நாளை மறுநாள், பிரதமர் நரேந்திர மோடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியின் அமைப்பாளராக பாரதிய பாஷா சமிதி தலைவர் பத்மஸ்ரீ சாமுகிருஷ்ண சாஸ்திரி நியமிக்கப்பட்டு உள்ளார் குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com