
வெளிநாடுகளிலிருந்து கணினி, மடிக்கணினி, டேப்லெட் உள்ளிட்ட கணினி சார் பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. லேப்டாப் உள்ளிட்ட கணினி சார் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான அத்தியாவசிய இறக்குமதி உரிமம் பெற்றவர்கள் அவற்றை இறக்குமதி செய்துகொள்ளத் தடையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சிறிய ரக மடிக்கணினிகளை இ-காமர்ஸ் எனப்படும் இணையதள விற்பனை மூலம் பெறலாம் என்றும் அவற்றிற்கு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் அனைத்து வழக்கமான வரிகளும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல வெளிநாடு களிலிருந்து இந்தியா வருவோர் கொண்டு வரும் குறிப்பிட்ட அளவிலான மடிக்கணினிகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தாது என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பல்வேறு துறை சார் ஆய்வுகள், தரப் பரிசோதனை நடைமுறைகள், பழுது நீக்குதல் மற்றும் மறு ஏற்றுமதி உள்ளிட்ட தயாரிப்பு மேம்பாட்டு நோக்கங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து மடிக்கணினிகளை இறக்குமதி செய்வதற்கு இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், வழக்கமான அலுவல் சார் கணினிகள் டேப்லெட்டுகள் உள்ளிட்ட மின்னணு பொருட்களின் இறக்குமதி 19.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. எனவே உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்த நடவடிக்கை சீனாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். ஏனென்றால், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் டெல், சாம்சங், ஏசர், லெனோவா, ஆப்பிள், எல்ஜி, எச்.பி போன்ற மடிக்கணினி விற்பனை செய்யும் நிறுவனங்கள் சீனாவை தளமாகக் கொண்டே இயங்குகிறது. எனவே அரசாங்கத்தின் இந்த முடிவு சீனாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதே காரணத்தைக் கூறி கடந்த காலங்களில் மொபைல் போன்கள் போன்ற பொருட்களுக்கு இந்திய அரசாங்கம் அதிக வரிகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.