மேகதாது அணையை கட்டியே தீருவோம் - கர்நாடக அரசின் அறிவிப்பால், இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சலசலப்பு!

மேகதாது அணையை கட்டியே தீருவோம் - கர்நாடக அரசின் அறிவிப்பால், இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சலசலப்பு!

மேகதாது சீசன் மறுபடியும் ஆரம்பமாகியிருக்கிறது. சென்றவாரம் கர்நாடக மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாகவும் அதற்கு தேவையான நிதியை ஒதுக்க தயராக இருப்பதாகவும் முதல்வர் அறிவித்திருக்கிறார்.

பெங்களூர் மாநகரத்திற்கு குடிநீர் வழங்கவும், மின் உற்பத்தியை தங்கு தடையின்றி உறுதி செய்வதற்கும் மேகதாது அணைத்திட்டம் பெரிதும் கைகொடுக்கும் என்று கர்நாடக முதல்வர் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடைபெறும் நேரத்தில், கர்நாடக மாநில அரசின் அறிவிப்பு தமிழ்நாட்டில் புயலை கிளப்பியிருக்கிறது.

கர்நாடக அரசின் முடிவு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்புக்கும் எதிரானது. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே எந்தவொரு அணையையும் கட்டக்கூடாது என்கிறார்கள் தமிழக விவசாயிகள்.

மேகதாது பிரச்னை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு விவாதிக்கவே அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அணை கட்டும் பணிகளை எப்படி ஆரம்பிக்க முடியும் என்கிற கேள்வி எழுப்புகிறார்கள்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிய தமிழக அரசு, மேகதாது அணைக்கு அனுமதி தரக்கூடாது என்று தீர்மானத்தை இயற்றி, டெல்லிக்குப் போய் நேரில் கொடுத்துவிட்டு வந்தார்கள். இந்நிலையில் தேர்தல் நேரம் என்பதால், கடந்த பத்தாண்டுகளில் காவிரி விஷயத்தில் அ.தி.முக அரசினால் பின்னடைவு ஏற்பட்டுவிட்டதாக தி.மு.கவினர் பேசி வருகிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க அ.தி.மு.க அரசு அழுத்தம் தரவில்லை என்பது முக்கியமான குற்றச்சாட்டு. 2017ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது, அ.தி.மு.க அரசு சரியான வாதங்களை முன்வைக்கவில்லை என்பது இன்னொரு குற்றச்சாட்டு என்று தி.மு.கவினர் முந்தைய எடப்பாடி பழனிசாமி அரசு மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

நிலத்தடி நீர் பயன்பாட்டை காவிரி நதி நீர் உபயோகமாக கருதக்கூடாது என்பதையும், காவிரி நீரை பிற தேவைகளுக்கு பயன்படுத்தினார் சம்பந்தப்பட்ட மாநில கணக்கீட்டில்தான் சேர்க்கவேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தில் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை முன்வைத்து அ.தி.மு,கவினர் உச்சநீதிமன்றத்தில் வாதாடியிருக்க வேண்டும் என்கிறார்கள்.

தன்னுடைய பகுதியில் நிலத்தடி நீர் குறைந்துவிட்டதாக கர்நாடக அரசு வாதங்களை முன்வைத்தது. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் குறையவில்லை என்பதால் ஒட்டுமொத்த தொகுப்பில் 10 டி.எம்.சியை குறைத்துக்கொள்ளமாறு கேட்டுக்கொண்டது. அதற்கு சரியான வாதங்களை தமிழ்நாடு தரப்பில் முன்வைக்கவில்லை என்கிறார்கள்.

குடிநீர், தொழிற்சாலை, உள்ளாட்சி போன்றவற்றுக்கு காவிரி நீர் பயன்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட மாநில கணக்கீட்டில்தான் சேர்க்கப்படும். பெங்களூர் குடிநீர் திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இவையெல்லாம் காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகார வரம்பில் வருமா என்பதிலும் தெளிவில்லை.

இந்நிலையில் மேகதாது விஷயத்தில் பத்தாண்டு கால அ.தி.மு.க அரசைத் தொடர்ந்து குறைகூறிக்கொண்டிருக்காமல் தி.மு.க அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் டெல்டா பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com