கொலையாளியைக் காட்டிக் கொடுத்த லிங்க பைரவி அம்மன்! - திரில்லர் ஸ்டோரி!

கொலையாளியைக் காட்டிக் கொடுத்த லிங்க பைரவி அம்மன்! - திரில்லர் ஸ்டோரி!

பிப்ரவரி 15 காலை, கவுஹாத்தியில் இருந்து 23 கிமீ தொலைவில் உள்ள சாங்ச்சாரியில் தேசிய நெடுஞ்சாலை 31 க்கு அருகில் முப்பது வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை போலீசார் மீட்டனர். உடல் ஒரு பெரிய பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு காம்ரூப்பின் சாங்சாரியில் வீசப்பட்டது.

காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) ஜிபி சிங், இந்தக் கொலை வழக்கின் விசாரணையை மேற்பார்வையிடும் பணியை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (மத்திய-மேற்கு எல்லை) பிரசேனஜித் சின்ஹாவிடம் ஒப்படைத்தார்

கொலையான பெண்ணின் உடலில் இருந்து கைப்பற்றப்பட்ட பதக்கத்தை ஒரு சான்றாக எடுத்துக் கொண்டு அதைச் சுற்றி தங்களது தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டதாகத் தெரிவித்திருந்தார் டி ஐ ஜி பிரசேனஜித். அதன்படி கொலையுண்ட பெண்ணின் கழுத்திலிருந்த பதக்கத்தில் ஒரு உருவம் பொரிக்கப்பட்டிருந்தது. அது எந்த தெய்வ வழிபாடு சார்ந்தது? என்று அஸ்ஸாம் காவல்துறையினர் இணையத்தின் உதவியை நாடி இருக்கின்றனர். அதில் தெரிய வந்த விவரங்கள் இந்தக் கொலை வழக்கைத் துப்பு துலக்க மிகவும் உதவியாக அமைந்தன.

அஸ்ஸாம் போலீஸாரின் கூற்றுப்படி, கொலையான பெண்ணின் கழுத்திலிருந்த டாலரின் இருந்த தெய்வத்தின் பெயர் மா லிங்க பைரவி. இது பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் கருவறை கொண்ட பிரசித்தி பெற்ற தென்னகக் கோவில்களில் ஒன்று. கோயம்பத்தூர் ஈஷா யோக மையத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. கொலையான பெண் இந்த அம்மனின் தீவிர பக்தையாக இருந்திருக்கலாம். அவர் அடிக்கடி வந்து செல்லும் இடமாகவும் இந்தக் கோவில் இருந்திருக்கலாம் எனும் அனுமானத்தில் அஸ்ஸாம் காவல்துறை அடுத்தபடியாக இந்தக் கோவில் நிர்வாகத்தை தொலைபேசி வாயிலாக அணுகியது.

டி ஐ ஜி பிரசேனஜித் நேரடியாகக் கோவில் நிர்வாகத்துடன் பேசியதில் உண்மை வெளிவந்தது. அந்தப் பெண்ணின் பெயர் வந்தனா ஸ்ரீ என்பதும் அவருக்கு 4 வயதில் ஒரு மகள் இருப்பதும் தெரிய வந்தது. அவர் வசிப்பது சென்னையில் என்றாலும் சில தினங்களுக்கு முன்பு தன் 4 வயது மகளுடன் தன் மகள் வாரணசிக்குச் சென்று விட்டதாக வந்தனா ஸ்ரீ யின் அப்பா காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் வசிக்கும் நபரான வந்தனா ஸ்ரீ வாரணசிக்கு ஏன் சென்றார். அப்படியானால் வாரணசிக்குச் சென்றவர் கவுஹாத்தியில் ஏன் கொலையுண்டு கிடக்க வேண்டும்? இடையில் நடந்தது என்ன? எனும் ரீதியில் இந்த வழக்கு அஸ்ஸாம் காவல்துறையினரைப் பல மூலைகளுக்கு இட்டுச் சென்றது. சென்னையில் இருந்து தன் தந்தையிடம் தெரிவித்திருந்தபடி வாரணசிக்கு தன் 4 வயது மகளுடன் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டுச் சென்ற வந்தனா ஸ்ரீ

ஃபிப்ரவரி 14 அன்று மாலை 7.30 மணிக்கு டெல்லிக்குச் சென்று அங்கிருந்து லெஃப்டினண்ட் கர்னல் ஏ எஸ் வலியாவைச் சந்திக்க நடுவில் கவுஹாத்தி சென்றிருக்கிறார். கொலையாவதற்கு முதல் நாள் இரவு ஏ எஸ் வாலியா, வந்தனா ஸ்ரீ மற்றும் அவரது குழந்தையை வரவேற்று அழைத்துச் சென்றதற்கு சி சி டி வி விடியோ ஃபூட்டேஜ்கள் ஆதாரங்களாகக் கிடைத்திருக்கின்றன என்பதாகத் தகவல்.

சீனியர் ராணுவ அதிகாரியான ஏ எஸ் வாலியா சென்னையில் பணியாற்றும் போது அவருக்கு வந்தனா ஸ்ரீ யுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பழக்கத்தின் நீட்சியாகத்தான் கர்னலைச் சந்திக்க கவுஹாத்தி சென்றிருக்கிறார் வந்தனா. ஆனால், இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் வந்தனாவைக் கொன்று பிளாஸ்டிக் பேகில் சுற்றி வீசிச் சென்று விட்டார் கர்னல்.

வந்தனா இறந்த பின் அவரது 4 வயது மகளை ரயிலில் கொல்கத்தா அழைத்துச் சென்று ஹவுரா ரயில் நிலையத்தில் அனாதையாக விட்டு விட்டு திரும்பியிருக்கிறார் கர்னல். இதற்கும் சி சி டி வி ஃபூட்டேஜ் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகத் தகவல்.

தற்போது காவல்துறை வசமிருக்கும் வந்தனாவின் மகளை அவளது தாத்தா தன்னுடன் அழைத்துச் சென்று விட்டதாகத் தகவல்.

அஸ்ஸாமின் சோனித்பூர் மாவட்டம், தேஜ்பூரில் உள்ள 4 கார்ப்ஸ் ராணுவத் தலைமையகத்தின் பாதுகாப்புப் பொதுத் தொடர்பு அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் ஏஎஸ் வாலியாவை, வந்தனா ஸ்ரீ என்ற திருமணமான பெண்ணைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் அஸ்ஸாம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வந்தனா ஸ்ரீ யைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்தாலும் கூட அவர் சொல்வதை அப்படியே நம்புவதற்கு அஸ்ஸாம் காவல்துறை தயாராக இல்லை.

இந்த வழக்கு குறித்த முறையான விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொலையாளியைக் காட்டிக் கொடுத்த மா லிங்க பைரவி பதக்கம் தான் காவல்துறையின் முக்கிய எவிடன்ஸ் என்பது இவ்வழக்கின் முக்கியமான விஷயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com