மனசுல பெரிய அயன் சூர்யான்னு நெனப்பு! விபரீதத்தில் சிக்கிய குருவி!

மனசுல பெரிய அயன் சூர்யான்னு நெனப்பு! விபரீதத்தில் சிக்கிய குருவி!

அயன் திரைப்பட பாணியில் விமான நிலையத்திலிருந்து தங்கத்தை கடத்த முயன்ற இளைஞர் திட்டம் சொதப்பி விபரீதத்தில் சிக்கினார்.

 உலக நாடுகளில் பல மாபியா கும்பல்களுடன் தொடர்பிலிருந்து கடத்தலில் ஈடுபடும் குருவிகள் இன்றும் ஏராளம். இதை நடிகர் சூர்யாவின் அயன் திரைப்படம் மூலம் இயக்குனர் கே.வி ஆனந்த் கச்சிதமாக விவரித்திருப்பார். இதில் சூர்யா கதாபாத்திரமான தேவா போலவே தன்னை நினைத்துக் கொண்ட இளைஞர், விமான நிலையத்தில் சூர்யா செய்யும் தில்லாலங்கடி வேலைகளைப் போல செய்ய முயற்சித்து, தான் வேலை பார்த்த குருவி கும்பலாலேயே சின்னாபின்னமான சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

காரைக்குடியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் சென்னை மண்ணடி பகுதியில் தங்கக் கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக, அவருடைய நண்பர் அசாருதீன் என்பவர் வாட்ஸ் அப்பில் தொடர்ந்து செய்திகளை பரப்பியுள்ளார். இந்த தகவல் சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையர் கவனத்திற்கு சென்றதால், அசாருதீனை தொடர்பு கொண்ட போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அசாருதீன் அளித்த தகவலின் அடிப்படையில், சென்னை பாரிமுனையிலுள்ள விடுதியை சுற்றிவளைத்த போலீசார், அந்த விடுதியில் மூன்றாவது தளத்திலிருந்து அறையை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கே பலத்த உடல் காயங்களுடன் ஸ்ரீராமை மீட்ட போலீசார் மூவரை கைது செய்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

எம்பிஏ பட்டதாரியான ஸ்ரீராம், படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காததால் நண்பர்கள் மூலம் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அசார் என்பவரிடம் குருவியாக வேலைக்குச் சேர்ந்துள்ளார். இதில் வெளிநாட்டிலிருந்து பொருட்களை கடத்தி வரும் ஸ்ரீராமிற்கு, பயணத்திற்கு 15,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை பணம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. இதேபோல கடந்த 6ம் தேதி மஸ்கட்டிலிருந்து 300 கிராம் தங்கத்தை விமானம் மூலம் கடத்தி வந்திருக்கிறார்.

அப்போது மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையைக் கண்டு பதற்றமடைந்த ஸ்ரீராம், அங்கிருந்த குப்பைத் தொட்டியிலேயே தங்கத்தை போட்டுவிட்டு வந்ததாக கும்பலின் தலைவர் ஆசாரிடம் தெரிவித்திருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசார் ஸ்ரீராமை அழைத்துக்கொண்டு மும்பை விமான நிலையம் சென்ற நிலையில், அங்கு வெளிநாட்டு முனையத்திலுள்ள குப்பைத் தொட்டியை சோதனை செய்தும் தங்கம் கிடைக்கவில்லை.

இதனால் ஸ்ரீராம் மீது ஆத்திரமும் சந்தேகமும் கொண்ட அசார், தனது ஆட்களை வைத்து பாரிமுனை பகுதியில் உள்ள விடுதியில் ஸ்ரீராமை அடைத்து வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில் ஸ்ரீராமை அடித்து துன்புறுத்திய கும்பல், உடலில் சிகரெட் துண்டுகளால் சூடு வைத்து சித்திரவதை செய்தது தெரியவந்துள்ளது. அப்போது அந்த கும்பல் கண் அசைந்த நேரத்தில் செல்போனை ஆன் செய்து நண்பனிடம் தனது நிலையை தெரிவித்திருக்கிறார். அதன்பின் தான் போலீஸ் வந்து அவரைக் காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த குருவி கும்பலின் தலைவன் அசாரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com