திரிபுராவின் முதலமைச்சராக மாணிக் சாகா! நாளை பதவியேற்பு விழா!

திரிபுராவின்  முதலமைச்சராக மாணிக் சாகா! நாளை பதவியேற்பு விழா!

திரிபுராவில் முதலமைச்சராக மாணிக் சாகா நாளை பொறுப்பேற்க உள்ளார். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், பாஜக சட்டமன்ற கட்சித் தலைவராக மாணிக் சாகா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல பிஜேபி தலைவர்கள் பங்கேற்க பதவியேற்பு விழா நாளை நடைபெற இருக்கிறது.

திரிபுராவில் முதலமைச்சராக பொறுப்பேற்கப் போவது யார் என இழுபறி நீடித்து வந்த நிலையில், மீண்டும் மாணிக் சாகா தலைமையில் நாளை புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது.

திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 60 இடங்களில் 32 இடங்களில் பாஜக வென்றது. கூட்டணிக் கட்சியான திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி 1 இடத்தையே கைப்பற்றியது. மாணிக் சாகா தலைமையில் அரசு மீண்டும் பதவியேற்கும் என எதிர்பார்த்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் பிப்லாப் தேவ் ஆதரவாளர்கள் மத்திய அமைச்சர் பிரதிமா பவுமிக்கை முதலமைச்சராக்க விருப்பம் தெரிவித்து போர்க்கொடி தூக்கியதால், குழப்பம் நிலவியது.

கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் சில தினங்களாக ஆலோசனை நடத்தி வந்த நிலையில், அகர்தலாவில் நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், பாஜக சட்டமன்ற கட்சித் தலைவராக மாணிக் சாகா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை அடுத்து ஆளுநர் சத்யதேவ் நாராயணனை சந்தித்த மாணிக் சாகா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனைத் தொடர்ந்து, ஆளுநரின் அழைப்பை ஏற்று நாளை இரண்டாவது முறையாக மாணிக் சாகா முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்நிகழ்வில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com