மணிப்பூர் வன்முறை: வெளி மாநிலத்தவர்களை வெளியேற்ற நடவடிக்கை!
மணிப்பூரில் வன்முறை மற்றும் கலவரங்கள் நடந்து நான்கு நாட்கள் ஆன பிறகும் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. வன்முறைக்கு இதுவரை 50-த்துக்கும் மேலானவர்கள் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு தேடி பக்கத்து மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட சூரசந்த்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் போடப்பட்ட ஊரடங்கு மக்கள் அன்றாட தேவைக்கு வேண்டிய பொருள்களை வாங்க வசதியாக மூன்று மணி நேரம் தளர்த்தப்பட்டதாகவும் மாநிலத்தில் மெல்ல மெல்ல சட்டம் ஒழுங்கு சீரடைந்து வருவதாகவும் புதிய தலைமைச் செயலர் வினீத் ஜோஷி தெரிவித்தார்.
இந்நிலையில் அங்கு வசித்து வரும் தங்கள் மாநிலத்தவர்களை பத்திரமாக வெளியேற்றும் நடவடிக்கையில் பல்வேறு மாநிலங்களும் ஈடுபட்டுள்ளன.
மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீத்த்தினரான மெய்டிஸ் வகுப்பினரை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கு குக்கி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக இரு
பிரிவினருக்கு எழுந்த மோதல் வன்முறையாக வெடித்தது.
மணிப்பூரில் தங்கி படித்து வந்த சிக்கம் மாநிலத்தை சேர்ந்த 128 மாணவர்கள் தலைநகர் இம்பாலிலிருந்து கொல்கத்தாவுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து பஸ்கள் மூலம் காங்டோக் அழைத்துச் செல்லப்பட்டதாக சிக்கிம் அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல மணிப்பூரில் நிலைமையை கண்காணித்து வருவதாகவும், அங்கும் படிக்கும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த 22 மாணவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் நடந்துள்ள வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும் தங்கள் மாநிலத்தவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் கூறியுள்ளார்.
வன்முறை நடந்த பகுதிகளில் சிக்கித் தவிக்கும் தங்கள் மாநிலத்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு கேரள அரசு, மணிப்பூர் அரசை கேட்டுக் கொண்டுள்ளது. கேரள மாநிலத்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநில காங்கிரஸ் தலைவர் சதீஸன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மணிப்பூரிலிருந்து தங்கள் மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மீட்க வசதியாக ஆந்திர மாநில அரசு தில்லியில் கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளது.
மணிப்பூர் அரசு நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் சிக்கித் தவித்த 600 பேரை மீட்க 22 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாகாலாந்து அரசு தெரிவித்துள்ளது. மாணவர்களை விமானங்கள் மூலம் மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாக திரிபுரா அரசு கூறியுள்ளது.
இதனிடையே மாநிலத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் அங்குள்ள மக்களை விமானம் மூலம் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய விமான ஆணையகம் தெரிவித்துள்ளது.