திருமலை திருப்பதியில் நாளை மாஸ் கிளீனிங்: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பங்கேற்பு!

திருமலை திருப்பதியில் நாளை மாஸ் கிளீனிங்: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பங்கேற்பு!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் அருள்புரியும் திருமலை திருப்பதியில் ஒவ்வொரு மாதமும், மாதத்தில் ஒருநாள், ‘மாஸ் கிளீனிங் புரோகிராம்’ என்ற பெயரில் முக்கியமான பிரமுகர்கள், பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்கும் தூய்மைப் பணியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செயல்படுத்த முடிவு செய்து இருக்கிறது.

அந்த வகையில் இம்மாதம் நாளைய தினம் (13.5.2023) முதல், ‘மாஸ் கிளீனிங் புரோகிராம்’ நடைபெற உள்ளது. அதன்படி திருமலைச் செல்லும் இரண்டு சாலைகள் மற்றும் நடைபாதையாக பக்தர்கள் பயன்படுத்தும் இரண்டு சாலைகளையும் முழுவதுமாக சுத்தம் செய்து, அந்தப் பகுதிகளில் பக்தர்கள் விட்டுச் செல்லும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது.

இந்தத் தூய்மைப் பணியில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரமணா, தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, மாவட்ட ஆட்சியர், எஸ்பி, தேவஸ்தான ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்கள் உட்பட 2000 பேர் பங்கேற்க இருப்பதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.

இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட இருக்கும் நபர்களை குறிப்பிட்ட இடத்துக்குக் கொண்டு சேர்ப்பது, பணி முடிந்த பிறகு மீண்டும் அவர்களை அழைத்துச் செல்வது, அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றை விநியோகிப்பது, சேகரிக்கப்பட்ட குப்பைகளை உடனுக்குடன் அங்கிருந்து அகற்றுவது ஆகியவற்றுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் நிர்வாகம் விரிவாகச் செய்து வருகிறது.

இந்நிலையில், இது குறித்துப் பேசிய திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, ‘திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும்’ என்று பக்தர்களிடம் கேட்டு கொண்டு இருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com