அதிசயம்…கிணற்றில் விழுந்தும் உயிர் தப்பிய 80 வயதுப் பாட்டி!

அதிசயம்…கிணற்றில் விழுந்தும் உயிர் தப்பிய 80 வயதுப் பாட்டி!

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை அன்று 20 அடி ஆழமான கிணற்றில் விழுந்து உயிர் தப்பிய அதிசயம் நடந்தது. மேலிருந்து கிணற்றில் விழுந்த அதிர்ச்சியில் லேசான காயம் அடைந்த அவர், தெலுங்கானா தீயணைப்புத் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டார்.

மணகொண்டூர் சஞ்சீவ்நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, காலை 6 மணியளவில் மாதவம்மா தனது வீட்டில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார். காலையில் தண்ணீர் எடுக்க கிணற்றுக்கு சென்றிருந்தவரைக் காணோம் என்றதும் குடும்பத்தினர் அவரைத் தேடி இருக்கிறார்கள். முதியவரான மாதவம்மா தவறிக் கிணற்றில் விழுந்துவிட்டார் எனத் தெரிய வந்ததும், உஷாரான குடும்பத்தினர் உடனடியாக காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தண்ணீர் ஆழமாக இல்லாததால், தீயணைப்பு வீரர் ஒருவர் கிணற்றுக்குள் நுழைந்து நாற்காலி வடிவில் கட்டப்பட்ட கயிற்றைப் பயன்படுத்தி அவரை மெது மெதுவாக வெளியே இழுத்தார். இந்த மீட்பு முயற்சி சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது, அந்த 20 நிமிடங்களில் மாதவம்மா முழுவதும் சுயநினைவுடன் இருந்தார்.

“மணகொண்டூர் தீயணைப்பு நிலையக் குழுவினர், கிணற்றில் தவறி விழுந்து உள்ளே சிக்கிய 80 வயது முதியவரை இப்படித்தான் பாதுகாப்பாகவும், அதிகக் காயங்கள் இன்றியும் மீட்டனர். நாற்காலி முடிச்சு உத்தியைப் பயன்படுத்தி மாதவம்மாவைப் பத்திரமாக கயிற்றின் உதவியுடன் குழுவினர் கிணற்றில் இறங்கி வெளியே கொண்டு வந்தனர்.

#dial101 #அவசர #தீயணைப்பு சேவைகள் #தெலுங்கானாவை பாதுகாக்க நாங்கள் சேவை செய்கிறோம்,"

- இது ட்விட்டரில் தெலுங்கானா தீயணைப்புத் துறையினர் பகிர்ந்திருந்த செய்தி.

இந்தக் காலத்தில் 80 வயது என்பதை முதுமையின் கடைசி கட்டம் என்றே சொல்லலாம். அந்த வயதில் நடக்கும் போது கால் இடறி விழுந்தோ அல்லது பாத்ரூம் தண்ணீரில் வழுக்கி விழுந்தோ அடிபட்டு கை, கால்களை முறித்துக் கொள்வோமோ என்று சதா பயத்துடன் முதியவர்கள் இயங்கும் நாட்களில் ஒரு 80 வயது மூதாட்டி 20 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்தும் கூடப் பெரிதாக காயங்களின்றி நலமுடன் காப்பாற்றப்பட்டிருக்கிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதில் தெலுங்கானா தீயணைப்புத் துறை வீரர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com