குஜராத்தில் அதிசய கிராமம்!

குஜராத்தில் அதிசய கிராமம்!

 
காந்தி நகர்: குஜராத்தில் பிரதமர் மோடி உள்பட எந்த ஒரு அரசியல் தலைவரும் பிரசாரத்துக்காக நுழைய முடியாத விசித்திர கிராமம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 1983 முதல் 39 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் பிரசார தடை உள்ளது.    

182 சட்டசபை தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்துக்கு 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்கு டிசம்பர் 1, டிசம்பர் 5ம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு இமாச்சல பிரதேச மாநில முடிவுகளுடன் சேர்த்து வெளியிடப்பட உள்ளது.

பிரசாரம் செய்ய தடை

 குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.   தடை விதிக்கப்பட்டுள்ள கிராமம் எது? எதற்காக அந்த தடை? என்பது பற்றிய தகவல் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் “ராஜ் சமாதியாலா” என்ற கிராமம் உள்ளது. இங்கு மொத்தம் 1700 பேர் வசிக்கின்றனர். இதில் 996 பேருக்கு ஓட்டுரிமை உள்ளது. இந்த கிராமத்தில்தான் அரசியல்வாதிகள் பிரசாரத்துக்காக நுழைய முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளை பிரசாரத்துக்காக கிராமத்துக்குள் நுழைய விட்டால் அது தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்தும் என்று கிராம மக்கள் நினைக்கின்றனர். இதனால் தான் பிரசாரத்துக்கு கிராம மக்கள் தடை விதித்துள்ளனர்.

இதுதொடர்பாக கிராமத்தின் நுழைவுப்பகுதியிலேயே அறிவிப்பு போர்ட் வைக்கப்பட்டுள்ளது. அதில் கிராமத்தின் விதிகள் இடம்பெற்றுள்ளன. விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

 அதேபோல் இக்கிராம மக்கள் ஓட்டு போடாவிட்டால் ரூ.51  அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் கிராம கமிட்டி கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தின்போது தேர்தலில் ஓட்டளிக்க முடியாதவர்கள் அதற்கான காரணத்தை தெரிவிக்கலாம்.  காரணத்தை கூறிவிட்டால் அபராதம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. மாறாக காரணத்தை கூறாமல் ஓட்டளிக்காவிட்டால் ரூ.51 அபராதத்தை அவர்கள் செலுத்த வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளது.

  இதுபற்றி அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில்,

‛‛1983ம் ஆண்டு முதல் எங்கள் கிராமத்தில் அரசியல் கட்சியினரை பிரச்சாரத்துக்கு அனுமதிப்பது இல்லை. எந்த கட்சியும் கிராமத்துக்குள் பிரசாரத்துக்கு வரமுடியாது. இது காலம்காலமாக பின்பற்றி வருகிறோம்.  

மக்கள் கூறுவது என்ன?

இதுபற்றி அந்த கிராம மக்கள் கூறுகையில், ‛‛நாங்கள் கிராமத்தில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களை பிரசாரம் செய்ய அனுமதிப்பது இல்லை. இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் தங்களின் விருப்பமான வேட்பாளருக்கு ஓட்டளிக்கலாம். இதில் கிராம நிர்வாகம் எதுவும் தலையிடாது. எங்கள் கிராமத்தை பார்த்து தற்போது அருகே உள்ள 5 கிராமங்களும் இந்த முடிவை எடுத்துள்ளன. அங்கும் அபராத முறை நடைமுறையில் உள்ளது. இதை அனைத்து கிராமங்களும் பின்பற்றினால் மக்களுக்கு நன்மை செய்ய விரும்பும் வேட்பாளர் வெற்றி பெறுவார்'' என்றனர்.

 யாராலும் செய்ய முடியாது

இதன்மூலம் பிரதமர் மோடி உள்பட எந்த அரசியல் கட்சிகளும் எங்கள் கிராமத்துக்குள் நுழைந்து பிரசாரம் செய்ய முடியாத நிலை உள்ளது.

இதுபோன்ற கட்டுபாடுகள் எங்கள் கிராமத்தில் இருந்தாலும் அரசாங்கம் எங்கள் கோரிக்கைகளை  ஏற்று அனைத்து அடிப்படை வசதிகளையும் எங்கள் கிராமத்துக்கு செய்து தந்துள்ளது. இணையதள வசதி, வைபை, கண்காணிப்பு கேமரா, ஆர்ஓ குடிநீர், அகலமான ரோடு வசதிகள் உள்பட அனைத்து வசதிகளும் எங்கள் கிராமத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com