
உலகிலேயே மிகவும் பிரபலான மனிதர் பாரத பிரதமர் நரேந்திர மோடிதான் என்று பல்வேறு ஆய்வுகளும் தெரிவித்து வருகின்றன. மோடி சிறந்த மனிதர், சிறந்த நிர்வாகி என்று மற்றவர்கள் புகழாரம் சூட்டுவதுதான் அவருக்கு பெருமையாக இருக்கும். ஆனால் அவர் சார்ந்து பா.ஜ.க.வினரே அவரை அடிக்கடி புகழ்ந்து பேசி சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.
அண்மையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் எழுத்தாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸின் மனைவி பிரதமர் தான் இந்தியாவின் தேசத்தந்தை என்று பேசினார். அவரது பேச்சுக்கு பலத்த கண்டனக்குரல் எழுந்தது. பிரதமர் நரேந்திர மோடி தேசத்தந்தை என்றால் மகாத்மா காந்தி யார்? என கேள்வி எழுப்பினர். இதனால் கதிகலங்கிப்போன அம்ருதா, பின்னர் சமாளித்துக் கொண்டு, “இந்தியாவுக்கு இரண்டு தேசத் தந்தைகள் உள்ளனர். முந்தைய இந்தியாவுக்கு மகாத்மா காந்தி தேசத் தந்தையாக இருந்தார். இன்றைய புதிய இந்தியாவின் தேசத் தந்தையாக நரேந்திர மோடி இருக்கிறார்” என்றார்.
இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி கருத்து தெரிவிக்கையில், பா.ஜ.க.வில் இரண்டு தந்தைகள் இருக்கலாம். ஆனால், நாட்டிற்கு தந்தை மகாத்மா காந்தி ஒருவர்தான் என குறிப்பிட்டார்.
அம்ருதா பட்னவிஸ், புதிய இந்தியாவின் புதிய தேசத்தந்தை நரேந்திர மோடி என்று பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புதிய இந்தியாவுக்காக பிரதமர் மோடி என்ன செய்துவிட்டார் என்று கேள்வி எழுப்பினார் பிகார் முதல்வர் நிதிஷ்குமார்.
பிரதமரின் செயல்பாடுகளால் ஈர்க்கப்படும் பா.ஜ.க. தலைவர்கள் பலரும் அவரை பல்வேறு தலைவர்களுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.
பா.ஜ.க. பிரமுகரான அவதூத் வாக் என்பவர் “ஆஜ் கே ஷிவாஜி நரேந்திர மோடி” என்று ஒரு புத்தகம் எழுதினார். அதில் அவர் பிரதமர் மோடியை “விஷ்ணு” என்று குறிப்பிட்டு 11-வது அவதாரம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு பலத்த கண்டனக் குரல்கள் எழவே பின்னர் தாம் எழுதிய புத்தகத்தை திரும்ப பெற்றார்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி மேற்குவங்க மாநிலம் விஷ்ணுபூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க. எம்.பி.யான செளமித்ர கான், நவீன இந்தியாவின் விவேகானந்தர் பிரதமர் மோடி என்று புகழ்ந்து பேசினார். சுவாமி விவேகானந்தர் நமக்கு கடவுள் போன்றவர். சுவாமி விவேகானந்தரின் மறுபிறப்புதான் நரேந்திர மோடி. பிதமர் நரேந்திர மோடி தனது வாழ்க்கை முழுவதையும் தேசத்தின் சேவைக்காகவே செலவிட்டு வருகிறார். அவரை நவீன இந்தியாவின் விவேகானந்தர் என அழைப்பதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே செளமித்ர கான் பேச்சுக்கு திரிணமூல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. திரிணமூலம் அமைச்சரும் கொல்கத்தா மேயருமான பிர்ஹத் ஹகீம், கானின் பேச்சு, விவேகானந்தரை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கு நேர் எதிர்மாறானது சுவாமி விவேகானந்தரின் கொள்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. சமிக் லாஹிரி கருத்து தெரிவிக்கையில், செளமித்ர கான் கட்சியிலிருந்து ஓரங்கட்டுப்பட்டு விட்டார். பிரதமர் மோடியை புகழ்வதன் மூலம் மீண்டும் செல்வாக்கு பெற நினைக்கிறார். அவரது முயற்சி தொடரட்டும். ஆனால் சுவாமி விவேகானந்தரை இழிவுபடுத்த அவருக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்டுள்ளார்.
முன்னதாக பிகார் மாநில பா.ஜ.க. தலைவர் நித்யானந்த ராயும் பிரதமர் மோடியை விவேகானந்தருடன் ஒப்பிட்டு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா, திரிபுராவில் உள்ள அகர்தலாவில் பா.ஜ.க. ரதயாத்திரை நிறைவுநாளில் பேசுகையில், “இந்தியா சுயசார்பு நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று சுவாமி விவகானந்தர் சொல்வார். அந்த இலக்கை அடையும் நோக்கில் இந்திய இளைஞர்கள் பிரதமர் மோடி தலைமையில் பயணிக்கின்றனர்” என்று பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.