பத்திரிகை சுதந்திரம் மீது மோடி அரசு தொடர் தாக்குதல் - பிபிசி விவகாரத்தில் காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு!

பத்திரிகை சுதந்திரம் மீது மோடி அரசு தொடர் தாக்குதல் - பிபிசி விவகாரத்தில் காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு!

பிபிசி நிறுவனத்தின் தில்லி, மும்பை அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

கடந்த 2002-ல் நடந்த குஜராத் கலவரம் குறித்த ஆவணப் படத்தை இங்கிலாந்து நாட்டின் செய்தி நிறுவனமான பிபிசி சமீபத்தில் வெளியிட்டது. குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதாக மறைமுகமாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த படத்தை யூ-டியூப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட மத்தியில் ஆளும் மோடி அரசு தடை விதித்தது. எனினும் சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இந்த ஆவணப் படம் திரையிடப்பட்டது. இதற்கிடையே, இப்படத்தை இந்தியாவில் எந்த ஒரு இடத்திலும் திரையிட தடை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், பிபிசியின் தில்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். முறைகேடுகள் மற்றும் வரிஏய்ப்பு தொடர்பான புகார்களின் பேரிலேயே இந்த அதிரடி சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக பிபிசி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

விமர்சனங்களைக் கண்டு மோடி அரசு அஞ்சுகிறது:

பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பி.பி.சி.யின் தில்லி, மும்பை அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமானவரிச் சோதனை ஒரு பயமுறுத்தல் நடவடிக்கையாகும். நரேந்திர மோடி அரசு விமர்சனங்களைக் கண்டு அஞ்சுகிறது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவிக்கையில், பத்திரிகை சுதந்திரம் மீது மோடி அரசு தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் மற்றும் பத்திரிகைகள் மீது அரசு இயந்திரத்தை பயன்படுத்தி நசுக்க முயல்வது ஜனநாயகத்து உகந்தது அல்ல. மக்கள் இதற்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார். முதலில் பி.பி.சி.யின் ஆவணப் படத்துக்கு தடை விதித்தார்கள். இப்போது பி.பி.சி. நிறுவனத்தில்

அதிரடியாக வருமான வரிச்சோதனை நடத்தியுள்ளனர். நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இருந்து வருகிறது. ஜனநாயக விரோத போக்கும், ஏதேச்சாதிகாரமான செயல்பாடுகளும் நீண்ட நாள் நிலைக்காது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

“இது சுதந்திரமான நாடு. மக்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்லலாம். ஆனால், அந்த கருத்து எங்களுடன் ஒத்துப்போவதாக இருக்க வேண்டும்” என்பதுதான் மோடி அரசின் பத்திரிகை சுதந்திரத்துக்கான விளக்கம் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

மோடி அரசு, எதிரிகளை குறிவைத்து அரசு இயந்திரங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. பிபிசி நிறுவனமும் அதில் இணைந்துள்ளது. மோடி அரசின் செயல்பாடுகளை மக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கெளரவ் பாட்டியா கூறும்போது, ‘‘ பிபிசி. இந்த நிறுவனத்தின் பிரச்சாரமும் காங்கிரஸ் கட்சியின் திட்டமும் ஒன்றுதான். அரசு அமைப்பு தன் கடமையை செய்ய அனுமதிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் குறைகூறுவது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com