மெட்ரோ ரயில் இரும்பு தூண் சரிந்ததில் தாய், மகன் பலியான துயர சம்பவம்!

மெட்ரோ ரயில் இரும்பு தூண் சரிந்ததில் தாய், மகன் பலியான துயர சம்பவம்!

கர்நாடக மாநில பெங்களூரில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளங்களில் தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. மெட்ரோ ரயில் சேவைக்கான இரண்டாவது கட்ட கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால் சாலைப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவ்வப்போது சிறுவிபத்துகளும் நேரிட்டு வருகின்றன.

இந்த நிலையில் மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக அமைக்கப்பட்டிருந்த 40 அடிய உயரமான இரும்பு தூண் திடீரென கீழே சரிந்து விழுந்ததில் தாய், இரண்டரை வயது மகன் உயிரிழந்தனர். தந்தையும் மகளும் படுகாயமடைந்தனர்.

பெங்களூரைச் சேர்ந்தவர் லோஹித் குமார் (38). சிவில் என்ஜீனியர். இவரது மனைவி தேஜஸ்வின் (35) சாஃப்ட்வேர் என்ஜினீயராகப் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு மகன் விஹான், மகள் விஸ்மிதா என இரு குழந்தைகள். இருவரும் இரட்டையர்கள்.

கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் காலையில் குழந்தைகள் இருவரையும் காப்பகத்தில் விட்டுச் செல்வது வழக்கம்.

லோஹித், மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் செவ்வாய்க்கிழமை (ஜன. 10) மோட்டார் சைக்கிளில் ஹெப்பல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மெட்ரோ ரயில்நிலையத்தின் இரண்டாவது கட்ட பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த பெரிய இரும்பு தூண் திடீரென சரிந்து அவர்கள் மீது விழுந்தது.

இதில் தேஜஸ்வினி மற்றும் மகன் விஹான் படுகாயமடைந்தனர். ஆபத்தான நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். தந்தை லோஹித் மற்றும் மகள் விஸ்மிதா இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கணவர் லோகித் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பொரேஷன் மற்றும் ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை, மெட்ரோ ரயில் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்ட இரும்பு தூண் எப்படி விழுந்தது என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், பா.ஜ.க. அரசின் 40 சதவீத கமிஷன் ஆட்சியின் விளைவுதான் இது. மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் எந்த வளர்ச்சித் திட்டமும் தரமானதாக இல்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com