சொகுசு காரில் பூந்தொட்டிகள் திருட்டு பற்றி நாகாலாந்து அமைச்சரின் கிண்டல்!
நாகாலாந்தில் உயர்கல்வி மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் டெம்ஜென் இம்னா அலோங். மாநிலத்தின் பா.ஜ.க. தலைவரும் இவர்தான். சமூக வலைத்தளங்களில் தமது கருத்துகளை பதிவிடுவதில் பிரபலமானவர். வித்தியாசமான தனது கருத்துக்களால் நெட்டிஸன்களுக்கு கலகலப்பு ஏற்படுத்தி வருபவர்.
வாழ்க்கைக்கு தேவையான அறிவுரை, தனது சொந்த வாழ்க்கை சம்பவங்களை நெட்டிஸன்களிடம் பகிர்ந்துகொள்வார். சமூக வலைத்தளங்களில் வெளிவரும் விடியோக்களுக்கு நகைச்சுவையாக கருத்துக்களைத் தெரிவிப்பதில் வல்லவர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு குருகிராமில் ஜி-20 நிகழ்ச்சிக்காக அரங்கத்தின் முன் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை இருவர் திருடி காரில் எடுத்துச் செல்லும் விடியோ வெளியானது. குருகிராம் போலீஸார் இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் 50 வயதான மன்மோகன் என்பதும் அவர் அந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்த்து. இதனிடையே இந்த சம்பவம் விடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது. பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
நாகாலாந்து அமைச்சரான டெம்ஜென் இம்னா அலோங்கும் தனது பாணியில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். “மனைவியை திருப்தி படுத்துவதற்காக பூந்தொட்டிகளை திருடிய நபர் இப்போது தில்லி போலீஸாரை திருப்திபடுத்தும் நிலையில் உள்ளார்” என்று கருத்தை பதிவு செய்திருந்தார்.
அவரது கருத்துப் பதிவை 10,000 பேருக்கு மேல் பார்வையிட்டுள்ளனர். அதில் 800-க்கும் மேலானவர்கள் தங்கள் கருத்துக்களை மறுபதிவு செய்துள்ளனர். பலரும் அவரது கருத்தை வரவேற்றாலும் ஒரு சிலர் அந்த நபரை கைது செய்தது குருகிராம் போலீஸே தவிர தில்லி போலீஸார் அல்ல என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஒருவர் நகைச்சுவையாக, “மனைவி மீது அன்பு கொண்டவர் இலவசமாக கிடைக்கும் பூந்தொட்டியை எப்படி மறுக்க முடியும்? … ஒருவேளை ரோஜாக்கள் வாங்க அவரிடம் பணம் இல்லையோ என்னவோ? அதனால்தான் பூந்தொட்டிகளை திருடியிருக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார். மனவியை சமாதானப்படுத்த பூந்தொட்டியைக்கூட திருடவேண்டும் என்பதை இப்போதுதான் நான் தெரிந்துகொண்டேன் என்று மற்றொருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
மூன்றாவது நபர் டென்ஜெம்ஜி ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது இப்போதுதான் தெரிகிறது என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.
தில்லி-குருகிராம் விரைவுப் பாதையில் ஆம்பியன்ஸ் மால் இருக்கும் இடத்தில் சொகுசு காரில் வந்த இருவர், பூந்தொட்டிகளை திருடி காரின் டிக்கியில் எடுத்துச் செல்கின்றனர். இந்த விடியோதான் வைரலானது. இந்த விடியோவை பார்த்த போலீஸார் பின்னர் காரையும், பூந்தொட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.