கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா - சுகாதார குறியீட்டில் முன்னிலை வகிப்பதாக நிதி ஆயோக் அறிக்கை

கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா - சுகாதார குறியீட்டில் முன்னிலை வகிப்பதாக நிதி ஆயோக் அறிக்கை

கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா என்னும் மூன்று தென்னிந்திய மாநிலங்களும் தேசிய அளவில் சுகாதார குறியீட்டில் முன்னிலை வகிப்பதாக நிதி ஆயோக் நிறுவனம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. 2017 முதல் ஒவ்வொரு ஆண்டும் சுகாதாரக் குறியீட்டை நிதி ஆயோக் வெளியிட்டு வருகிறது. இதுவரை நான்கு அறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஐந்தாவது அறிக்கை கூடிய விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது அறிக்கையில் கோவிட் தொற்றை பல்வேறு மாநிலங்களை கையாண்ட விதம் பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிட் தொற்றுப் பரவில் இருந்த 2020 முதல் 2021 காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக மூன்று மாநிலங்களையும் பாராட்டியிருக்கிறது. அதில் முதலிடத்தை கேரளாவும் இரண்டாமிடத்தை தமிழ்நாடும் பெற்றிருக்கின்றன.

சிறிய மாநிலங்களில் திரிபுரா சிறப்பாக செயல்பட்டிருப்பதாகவும், யூனியன் பிரதேசங்களில் டெல்லியின் செயல்பாடு கொரானா காலகட்டத்தில் மோசமாக இருந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்களில் மகராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்டவை சறுக்கலை சந்தித்திருக்கின்றன.

வருடாந்திர சுகாதார குறியீடு என்பது ஒவ்வொரு மாநிலம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத்துறையில் மேற்கொண்டு வரும் செயல்பாட்டுகளை பொறுத்து அமைவது. 24 காரணிகளின் அடிப்படையில் மாநிலங்களின் தர வரிசை அமைகிறது. பிறப்பு இறப்பு விகிதம், ஆண் பெண் பாலின சமநிலை, ஊட்டச்சத்து குறைபாடுகள், ஹெச்ஐபி நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளிட்டவையும் சுகாதார குறியீட்டில் கணிசமான ஏற்ற, இறக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை.

2017 முதல் கடந்த 5 ஆண்டுகளாக நிதி ஆயோக் தர வரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. மாநிலங்களின் செயல்பாடு மட்டுமல்லாமல் மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தோடு எந்தளவுக்கு இணைந்து செயல்படுகிறது என்பதைப் பொறுத்தும் தர வரிசையில் புள்ளிகள் தரப்படுகின்றன.

பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என்னும் அடிப்படையில் இரு பிரிவுகளாக தர வரிசை பட்டியல் அமைக்கப்படுகின்றன. இதில் 19 மாநிலங்கள் கொண்ட பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் பெற்றிருக்கின்றன. கடைசி இடைத்தில் பீகார், உத்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும்போது சுகாதாரக் குறியீட்டில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதாக ராஜஸ்தான், உத்தரகாண்ட், ஒடிசா மாநிலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிறிய மாநிலங்களை பொறுத்தவரை திரிபுரா, சிக்கிம் மற்றும் கோவா உள்ளிட்டவை சிறப்பாக செயல்பட்டிருப்பதாகவும் அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்டவை கடைசி இடத்திலும் இருக்கின்றன.

டிசம்பர் 2022ல் ஐந்தாவது சுகாதார குறியீட்டு தர வரிசைப்பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது. இதுவரை பொதுவெளியில் வெளியிடப்பட்டவில்லை. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் ஏற்கனவே பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது. கடைசியாக வெளியான நான்காவது அறிக்கையிலும் கேரளாவும், தமிழ்நாடும் முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com