நிதிஷ் குமார் - ஜே.பி.நட்டா
நிதிஷ் குமார் - ஜே.பி.நட்டா

பிகார் மக்களை நிதீஷ் ஏமாற்றிவிட்டார்: நட்டா காட்டமான பேச்சு!

பிகார் மாநிலத்தில் பா.ஜ.க.வும் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. நிதிஷ் முதல்வரானார்.

ஆனால், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க. ஐக்கிய ஜனதாதளம் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து நிதீஷ்குமார், பா.ஜ.க.வுடன் உறவை முறித்துக் கொண்டு லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சியுடன் மகா கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, முஸாஃபர்நகர் மாவட்டம், வைஷாலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பாரு என்னுமிடத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “பிகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் லாலு கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்ததிலிருந்து அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. மீண்டும் காட்டாச்சி தலைதூக்கிவிட்டது. கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை.

நல்லாட்சி தருவதாகக்கூறி தேர்தலில் மக்களிடம் வாக்கு பெற்ற நிதீஷ் குமார், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தார். ஆனால், இப்போது எதிர் அணியுடன் கூட்டுவைத்துக் கொண்டு ஆட்சி நடத்தி வருவதன் மூலம் அவர் பிகார் மக்களை ஏமாற்றிவிட்டார். வரும் தேர்தலில் மக்கள் நிதீஷ்குமாருக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

ஜே.பி. நட்டாவின் பேச்சை அடுத்து, முன்னாள் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ஜ.க.வுக்கு நிதீஷ் குமார் பதிலடி கொடுத்துள்ளார். பா.ஜ.க.வினர் நாட்டுக்காக எதையும் செய்யமாட்டார்கள். அவர்கள் தங்களுக்கு வேண்டியதை மட்டும் செய்துகொள்வார்கள். இதனால்தான் அக்கட்சியுடன் கூட்டணியை முறித்துக்கொள்ள நேர்ந்தது என்று தெரிவித்துள்ளார்.

ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியினர் எங்களைப் பற்றி ஏதாவது கருத்து கூறினால், அதை நாங்கள் பெரிதுபடுத்துவதில்லை. நாங்கள் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். முக்கியமான முடிவுகளை சேர்ந்தே எடுக்கிறோம் என்றும் நிதீஷ் கூறியுள்ளார்.

இதனிடையே முதல்வர் நிதீஷ் குமார், மாநில அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் யாத்திரை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com