என் கேள்விக்கு பதில் இல்லை: ராகுல் காந்தி!
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானித்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்த பிரதமர் மோடி, பல விஷயங்களை பேசிய போதிலும் எங்களது கேள்விக்கு பதிலளிக்கவில்லை. அவரது பேச்சு எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் கூறினார்.
ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும முறைகேடுகள் தொடர்பாக உண்மை நிலை என்ன என்று தெரிவிக்க வேண்டும், இது தொடர்பாக விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம்.
ஆனால், எங்கள் கேள்விக்கு பிரதமர் பதிலளிக்காமல் கெளதம் அதானியை பாதுகாக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளார். அதானி விவகாரத்தில் விசாரணக்கு அவர் உத்தரவிடவில்லை.
அவர், தனது உரையில் அதானியை பற்றி பேசவேயில்லை. அதானி அவருக்கு நண்பர் இல்லையெனில் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பார். இதிலிருந்து உண்மை என்ன என்பது தெரியவருகிறது. போலி நிறுவனங்கள்,
போலியாக பணம் கைமாறுகிறது. ஆனால், அவை பற்றி பேசாமல் பிரதமர் மெளனம் காக்கிறார்.
பிரதமர், அதானியை பாதுகாக்கவே விரும்புகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதற்கான காரணங்கள் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
தேசத்தின் பாதுகாப்பு மற்றும் தேசத்தின் கட்டமைப்பு குறித்த ஒரு விவகாரத்தில் முறைகேடுகள் நடந்திருக்கிறது என்றால் பிரதமர் அது தொடர்பாக விசாரணை நடத்தியிருக்க வேண்டும். மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. ஆனால், இதுகுறித்து பேசவே பிரதமர் மறுக்கிறார்.
இந்த முறைகேடுகள் தொடர்பான செய்தி வெளியானதிலிருந்தே பிரதமர் அதிர்ச்சியில் இருக்கிறார். ஆனால் பேச மறுக்கிறார். நான் ஒன்றும் சிக்கலான கேள்வி அவரிடம் கேட்கவில்லை. நீங்கள் வெளிநாடு செல்லும்போது எல்லாம் அதானி உடன் வந்துள்ளார். எத்தனை முறை சென்றீர்கள்? எத்தனை முறை சந்தித்தீர்கள்? அதன் நோக்கம்தான் என்ன? என்றுதான் கேள்வி எழுப்பினேன். ஆனால் அதற்கு அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்றார் ராகுல்காந்தி.
“நேற்று மக்களவையில் பிரதமர் மோடி பேசியபோதிலும் அவரது பேச்சு திசைத்திருப்பும் வகையிலேயே இருந்தது. அதானிக்கும் தமக்கும் உள்ள தொடர்பு பற்றி அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை” என்றார் காங்கிரஸ் பொதுச் செயாளர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ்.
முன்னதாக மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதைப் பார்த்து உலக நாடுகள் வியப்படைந்துள்ளன. ஆனால், இங்குள்ள எதிர்க்கட்சிகள் விரக்தியில் ஏதேதோ பேசி வருகின்றனர்.
அவர்கள் ஆட்சியில் ஊழல், வன்முறை, பயங்கரவாதம் உச்சத்தில் இருந்தது. நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த அவர்கள் இப்போது எனது ஆட்சியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதைக் கண்டு பொறாமையில் ஆதாரமில்லாத புகார்களைக் கூறிவருகின்றனர்.
இந்த அரசு மக்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறது. 140 கோடி மக்கள் எனக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் அவதூறு பேச்சுகளாலும், ஆதாரமில்லாத புகார்களாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறியிருந்தார்.