உயிரே போனாலும் பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி இல்லை: நிதிஷ்குமார்!
உயிரே போனாலும் பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று ஐக்கிய ஜனநாதளம் கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
எந்தவித அடிப்படை காரணங்களும் இல்லாமல் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு லாலு மற்றும் அவரது மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வினி யாதவ் மீது வழக்கு போட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நிதிஷ்குமாருக்கு செல்வாக்கு இல்லை. எனவே அவரது ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் மீண்டும் கூட்டணி சேருவதற்கான வாய்ப்பே இல்லை என்று பா.ஜ.க. தலைவர்கள் பேசிவருகின்றனர்.
இதனிடையே “ஐக்கிய ஜனதாதளம்- பா.ஜ.க. இடையே மீண்டும் கூட்டணி உருவாகலாம் என்று பலரும் பேசிவருகின்றனர். ஏன் நிதிஷ்குமார்கூட மீண்டும் பா.ஜ.கவுடன் சேர்ந்துவிடலாமா என்ற ஊசலாட்டத்தில் உள்ளார். மீண்டும் அவரிடம் ஏமாற நாங்கள் தயாராக இல்லை” என்று பிகார் மாநில பா.ஜ.க. தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியிருந்தார்.
நிதிஷ்குமாருக்கு செல்வாக்கு இல்லை. கடந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தலிலேயே இது எங்களுக்கு தெரியவந்தது. ஆனாலும், பிரதமர் மோடி தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதி காரணமாக நிதிஷ்குமாருடன் இருந்த கூட்டணியிலிருந்து நாங்கள் விலகாமல் இருந்தோம். ஆனால், நிதிஷ்குமார் பிரதமர் மோடிக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். எனவே செல்வாக்கு இழந்துவரும் அவருடன் கூட்டணி சேருவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில்தான் பா.ஜ.க.வுக்கு பதிலளிக்கும் விதமாக, உயிரே போனாலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
லாலுவின் மீதும், அவரது மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வினி யாதவ் மீது ஊழல் வழக்குகளைப் போட்டால் நான் கூட்டணியிலிருந்து விலகி விடுவேன். என்னை தங்கள் பக்கம் இழுத்துவிடலாம் என பா.ஜ.க.வினர் கணக்கு போடுகின்றனர். அவர்கள் போடும் கணக்கு தவறானது. நான் இனி ஒருபோதும் பா.ஜ.க.வுடன் கூட்டு சேரமாட்டேன்.
வரும் மக்களவைத் தேர்தலில் பிகாரில் 40 தொகுதிகளில் 36 இடங்களை கைப்பற்றிவிடுவோம் என்று பா.ஜ.க.வினர் கூறிவருகின்றனர். ஆனால், அவர்களின் கனவு பலிக்காது.
கடந்த தேர்தலில் எங்களுடன் கூட்டணி வைத்ததால்தான் பா.ஜ.க.வுக்கு தேர்தல் வெற்றி கிடைத்தது. பா.ஜ.க. இந்துத்துவா கொள்கையை பின்பற்றி வந்தபோதிலும் முஸ்லிம்கள் எனக்காக பா.ஜ.க.வுக்கு அளித்தார்கள். அப்படியிருக்கும்போது நாங்கள் 36 இடங்களை வெல்வோம் என்று பா.ஜ.க. கூறுவது கேலிக்கூத்தாகும் என்றார் நிதிஷ்குமார்.
கடந்த தேர்தலில் நிதிஷ் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தார். எனினும் இருதரப்பினருக்கும் கருத்து மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் பா.ஜ.க. ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக நினைத்த நிதிஷ், அக்கட்சியுடனான உறவை அதிரடியாக முறித்துக் கொண்டு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியுடன் புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.