ஒடிசா சிவன் கோயில்களில் கஞ்சா பயன்படுத்த தடை!
ஒதிஷா மாநிலத்தில் உள்ள சிவன் கோயில்களுக்கு கஞ்சா எடுத்து செல்லவும், அதனை பிரசாதமாக வழங்கவும் மாநில அரசு தடை விதித்துள்ளது. சிவன் கோயில்களில் கஞ்சா பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த வலியுறுத்தி, அனந்த பாலியா அறக்கட்டளை என்ற ஆன்மீக அமைப்பானது, கலால் துறைக்கு மனு அனுப்பியதை அடுத்து, ஒடியா மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் துறையால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஏப்ரல் 13 அன்று, பாபா பாலியா என்று பிரபலமாக அறியப்பட்ட அறக்கட்டளை நிறுவனர் பிஸ்வபிரேமி பாலியா, கோவில்களில் கஞ்சா பயன்படுத்துவது கோவில்களில் சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கிறது என்று அரசாங்கத்திடம் முறையிட்டார். "சிவனுக்கு வழங்க கஞ்சாவைத் தவிர வேறு பிரசாதங்கள் உள்ளன" என்று பத்ம விருது பெற்றவரான அந்த சமூக சேவகர் எழுதினார், எனவே சிவன் கோவில்களுக்குள் கஞ்சா நுழைவதைக் கட்டுப்படுத்துமாறு அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கடிதம் ஒடியா மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத் துறைக்கு அனுப்பப்பட்டது.
கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.க்களிடம் பேசிய துறையின் இயக்குனர் திலீப் ரௌத்ரே, "ஏப்ரல் 13ம் தேதி இத்துறைக்கு வந்த கடிதம் தொடர்பாக, மாநிலத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் கஞ்சாவை தடை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று எழுதினார்.
ஒடியா மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அஸ்வினி பத்ரா கூறுகையில், "சில கோவில்களில் மிருக பலி நிறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு சீர்திருத்தம். காலம் மாறுகிறது, நடைமுறைகளும் மாறி வருகின்றன. கோவில்களில் கஞ்சா நுழைவதை நிறுத்தினால் எந்த பாதிப்பும் இல்லை."
அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து ஒடிசாவில் உள்ள சில கோயில் அமைப்புகள் இந்த நடவடிக்கையை வரவேற்றாலும், சிலர் சடங்குகளின் போது கஞ்சாவை வழங்குவது வழக்கம் என்று கூறுகிறார்கள். இங்கு நெடுங்காலமாகப் பல்வேறு சடங்கு வடிவங்களில், மற்ற பிரசாதங்களைத் தவிர, சிவபெருமானுக்கு வழங்குவதற்காக ஒரு சிறிய அளவு கஞ்சாவும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் எதிர்க்குரல் எழுப்புகின்றனர்.
இருப்பினும், பாலா பாலியா, அரசுக்கு எழுதிய கடிதத்தில், சிவபெருமான் கஞ்சாவை விரும்புவது போன்று நம்புவது மூடநம்பிக்கை என்று வாதிட்டுள்ளார்.
இந்த விஷயத்தில் , ஒதிஷாவில் மதுவை ஒழிக்க கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என வாதாடியவர்களில் ஒருவரான முன்னாள் பிஜேடி(பிஜூ ஜனதா
தளம்) எம்பி ததாகத் சதபதி, “ஒதிஷாவில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் கஞ்சா பிரசாதமாக வழங்கப்படுவது என்பது ஒரு நீண்ட காலப் பழக்கம். இது இறைவனுக்கான நிலையான பிரசாதமாக உள்ளது." என்று கருத்து தெரிவித்திருந்தார்.