மோடி அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்: எதிர்க்கட்சிகள் திட்டம்

மோடி அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்:
எதிர்க்கட்சிகள் திட்டம்

இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய எதிர்க்கட்சி கூட்டணியான “இந்தியா” மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக மக்களவையில் பிரதமரை பேசவைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ள எதிர்க்கட்சி கூட்டணிகள் முடிவு செய்துள்ளன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைவதற்கும் இன்னும் 13 நாட்களே இருக்கும் நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை பரிசீலித்து  அனுமதி அளிக்க மக்களவைத் தலைவருக்கு 10 நாட்களாவது ஆகும் என்பதால் புதன்கிழமையே நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் முன்வைக்கலாம் என்று தெரிகிறது.

இந்த தகவலை மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் ஆதிர் ரஞ்சன் செளதுரி உறுதிப்படுத்தியுள்ளார். புதன்கிழமை காலை காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மான நகல் தயாரிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக 26 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்க உள்ளனர். மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டுமானால் குறைந்தது 50 உறுப்பினர்களுக்கு மேல் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

முன்னதாக மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது குறித்து திங்கள்கிழமை கார்கே தலைமையில் நடைபெற்றது. பின்னர் இது குறித்து இதர அரசியல் கட்சிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே எதிர்க்கட்சிகள் கூட்டணியை பிரதமர் மோடி கிழக்கிந்திய கம்பெனி கூட்டம் என்று விமர்சித்துள்ளதற்கு கடும் கண்டம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவிக்கையில் எதிர்க்கட்சி கூட்டணியைக் கண்டு பிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது என்று கூறினார்.

எங்களை மோடி எப்படி வேண்டுமானாலும் அழைக்கட்டும். நாங்கள் “இந்தியா” கூட்டணிதான்.  மணிப்பூரில் அமைதி திரும்பவும், மணிப்பூர் மக்களின் கண்ணீரை துடைப்பதற்கும் உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். மணிப்பூரில் இந்தியா கூட்டணியின் யோசனைகளைச் செயல்படுத்துவோம். அமைதியை கட்டமைப்போம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இதனிடையே மணிப்பூர் விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், இது விஷயத்தில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆனாலும், எதிர்க்கட்சிகள் மோதலுக்கு தயாராக இருப்பதாகவே தெரிகிறது. நாடாளுமன்றத்து வெளியே மணிப்பூர் சம்பவம் பற்றி பேசும் பிரதமர்  நாடாளுமன்றத்துக்கு உள்ளே வந்து பேசத் தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனிடையே மற்றொரு காங்கிரஸ் தலைவர் கருத்து தெரிவிக்கையில் நாடாளுமன்றத்தில் எங்களுக்கு போதிய பலம் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். எனினும் பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வந்து மணிப்பூர் விவகாரம் குறித்து பேசவைக்கும் கடைசி ஆயுதமாகவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை  கையிலெடுத்துள்ளோம் என்றார்.

-

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com