
கர்நாடகாவில் பட்டியலினம் மற்றும் பழங்குடி (SC/ST) சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்து அவசர சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு பட்டியலினத்தவர், மற்றும் பழங்குடி (SC/ST) சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி நீண்ட கால போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முதல்வர் தலைமையிலான அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில், பழங்குடி மற்றும் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு உயர்வுக்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதை ஆளுநருக்கு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து அம்மாநில சட்டத்துறை அமைச்சர் ஜே.சி மதுசூதனசுவாமி தெரிவித்ததாவது;
இந்த எஸ்.சி இட ஒதுக்கீடு 15-லிருந்து 17 சதவீதமாகவும், எஸ்.டி சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு 3-லிருந்து 7 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு மூலம் கர்நாடகாவில் இட ஒதுக்கீடு அளவு 56% ஆக உயர்ந்துள்ளது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இட ஒதுக்கீடு 50% அளவைத் சதவீதத்தை தாண்டக் கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளது.
எனவே, இந்த இட ஒதுக்கீடு உயர்வு சட்டத்தை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையின் கீழ் கொண்டுவந்து, சட்ட பாதுகாப்பு வழங்க கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது.
-இவ்வாறு அவர் தெரிவித்தார்.
'’இந்த வரலாற்று முடிவு மூலம் எஸ்சி,எஸ்டி சமூக மக்கள் வாழ்வில் ஒளி பெற்று,கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உரிய வாய்ப்புகளை பெறுவார்கள்'’ என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ.. கர்நாடகாவில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர இத்திட்டததை செயல்படுத்தியுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.