இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது!

இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஒடிசா ரயில் விபத்து, மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன. அதேநேரத்தில் தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெறுவது குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக சார்பில் இரு அவைகளிலும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், இன்று தொடங்கி, அடுத்த மாதம் 11-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்காக மத்திய அரசு சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சார்பில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக சார்பில் திருச்சி சிவா, அதிமுக சார்பில் தம்பிதுரை, ஓ.பி.ரவீந்திரநாத், மதிமுக சார்பில் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது. இதுதொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்தை இன்று கொண்டுவர உள்ளதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.
முன்னதாக, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, இந்தக் கூட்டத் தொடரில் 31 மசோதாக்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலத் ஜோஷி தெரிவித்தார்.

எனினும், இந்தப் பட்டியலில் பொது சிவில் சட்ட மசோதா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத் தொடரிலேயே பொது சிவில் சட்டத்தை கொண்டுவர பாஜக திட்டமிட்ட நிலையில், கடைசி நேரத்தில் இது சேர்க்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து மற்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வலியுறுத்தி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் 31 மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்தாலும், டெல்லி மாநில அரசின் அதிகாரம் தொடர்பான மசோதா முக்கியத்துவம் பெறுகிறது. டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com