பொருட்களை வாங்கிக் குவிக்கும் மக்கள்...மூன்றே ஆண்டுகளில் எங்கேயோ போய்விட்டோம்! எந்தெந்த பொருட்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது?
மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்திருப்பதாக ரீடெய்லர் அசோசியஷேன் ஆப் இந்தியாவின் ஆய்வு தெரிவிக்கிறது. நகைகள், விளையாட்டுச் சாமான்கள், மரச்சாமான்கள், காலணிகள் போன்றவற்றின் விற்பனை குறைந்தபட்சம் 16 சதவீதம் உயர்ந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
2021 டிசம்பர் மாதத்தை விட 2022 டிசம்பர் மாதத்தில் விற்பனை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக கொரானா தொற்று பரவலுக்கு முந்தைய காலத்தையும் விட விற்பனை தற்போது அதிகமாகியிருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, கிழக்கு பகுதி மாநிலங்கள் உச்சத்தில் இருக்கின்றன.
இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் விற்பனை 20 சதவீதமும், தென்னிந்தியாவில் 18 சதவீதமும் அதிகரித்திருக்கின்றன. மேற்கு மாநிலங்களில் 16 சதவீதமும் வடக்கு மாநிலங்களில் 10 சதவீதமும் விற்பனை வளர்ச்சி பெற்றிருக்கின்றன. ஆகவே, அன்றாடத் தேவைக்காக இந்தியர்கள் வாங்கி குவிப்பது குறைந்தபட்சம் 16 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2019 ஆண்டோடு ஒப்பிடும்போது காலணிகளின் விற்பனை சென்ற ஆண்டு 29 சதவீதம் உயர்ந்திருக்கிறது. நகை விற்பனையும் 26 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது. இத்தனைக்கும் தங்கத்தின் மதிப்பு கடந்த மூன்று ஆண்டுகளில் 30 சதவீதத்திற்கு மேல் உயர்ந்திருக்கிறது.
மரச்சாமான்கள் விற்பனை 19 சதவீதம் உயர்ந்திருக்கிறது. உணவுப்பொருட்கள், காய்கறி போன்றவை வாங்குவதும் 14 சதவீதம் அதிகரித்திருக்கிறது. எந்தவொரு பொருளாக இருந்தாலும் அதன் விற்பனை கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்சம் பத்து சதவீதம் உயர்ந்திருக்கிறது என்கிறார்கள்.
புதிய வீடுகள் கட்டுவது, ஹோட்டலில் உணவு அருந்துவது, சுற்றுலா செல்வது கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பிருந்தததை விட அதிகரித்திருக்கிறது. கொரானா ஊரடங்கால் அடக்கி வைக்கப்பட்ட அத்தனை ஆசைகளும் பீறீட்டு கிளம்பியிருக்கின்றன. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு இது நீடிக்கும் என்கிறார்கள்.
ஏராளமான பொருட்கள் வாடிக்கையாளர்கள் வாங்கி குவித்தாலும், எந்தப் பொருட்களை வாங்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள். ஆகவே, திடீர் வளர்ச்சி என்று தோன்றினாலும் ஆரோக்கியமான வளர்ச்சியாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.