பா.ஜ.க ஆளும் திரிபுராவில் நாளை தேர்தல் வாக்குப்பதிவு - முடிவுகள் அடுத்த மாதம்!

பா.ஜ.க ஆளும் திரிபுராவில் நாளை தேர்தல் வாக்குப்பதிவு - முடிவுகள் அடுத்த மாதம்!

திரிபுரா மாநிலத்தில் நாளை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வடகிழக்கில் அமைந்துள்ள திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் மார்ச் மாதத்தில் நிறைவடைகிறது. திரிபுராவில் பிப்ரவரி16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் பிப்ரவரி 27-ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று கடந்த ஜனவரியில் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதன்படி திரிபுராவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. திரிபுராவில் தற்போது மாணிக் சஹா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும் பாஜக 55 தொகுதிகளிலும் அதன்கூட்டணி கட்சியான ஐபிஎப்டி 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஒரு தொகுதியில் மட்டும் பாஜகவுக்கு போட்டியாக கூட்டணி கட்சியான ஐபிஎப்டியும் வேட்பாளரை நிறுத்தி உள்ளது.

ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் 46 தொகுதிகளிலும் காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சுயேச்சைக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 20 பேர் பெண்கள். மொத்தம் 28.12 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 3,328 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 28 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத் தேர்தலில் முதல் முறையாக திரிணமூல் காங்கிரஸ் களம் இறங்கியுள்ளது. இது தவிர திப்ரா மோதா என்ற அமைப்பும் புதிதாக களத்தில் குதித்துள்ளது.

தேர்தல் களத்தில் ஐந்து கட்சிகள் போட்டியில் இருந்தாலும் மும்முனை போட்டிதான் என்று சொல்ல வேண்டும்.

திரிபுரா மாநிலத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்து வருகிறது. அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுமே தேர்தலில் வென்று ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளன. எதிர்க்கட்சிகளின் வியூகத்தை எப்படியாவது முறியடித்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. வாக்குப்பதிவு நாளை நடைபெற்றாலும் வரும் மார்ச் மாதம் 2 ஆம் தேதிதான் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com