அவைக்கு வருவது பிரதிநிதிகளின் உரிமை - பிரதமரை கட்டாயப்படுத்த முடியாது: குடியரசு துணைத் தலைவர் பதில்!

குடியரசு துணைத் தலைவர்  ஜெகதீப்  தன்கர்
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்

பிரதமர் மோடியை அவை நடவடிக்கைகளில் பங்கேற்க உத்தரவிட முடியாது என்று குடியரசுத் துணைத் தலைவர் நாடாளுமன்றத்தில் பதில்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சியினர் மணிப்பூரில் ஏற்பட்டிருக்கக் கூடிய கலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். இதனால் அவையில் ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே கூச்சல் குழப்பம் நிலவுகிறது.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்துடன் ஆளும் கட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பிரதமர் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் என்பது நடைமுறை. இதைப் பின்பற்றி பிரதமர் ஆகஸ்ட் 8ம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கரிடம் நோட்டீஸ் ஒன்றை அளித்துள்ளார். அந்த நோட்டீஸில், பிரதமர் தொடர்ந்து அவைக்கு வராமல் புறக்கணித்து வருகிறார். நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து அலுவலகத்தில் மட்டும் இருந்துவிட்டு செல்வது பிரதமருக்கான பணி அல்ல, பிரதமர் அவர்களை உடனடியாக அவை நடவடிக்கைகளில் பங்கேற்க செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்த மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் அளித்துள்ள பதில் பிரதமரை நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் பங்கேற்க உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்டிருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.

அவைக்கு வருவது மற்ற உறுப்பினர்களைப் போல பிரதமருக்கு உண்டான தனிப்பட்ட உரிமை. பிரதமரை அவைக்கு வர வேண்டும் என்று உத்தரவிடுவது நான் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு புறம்பான செயல். ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள தனிமனித உரிமையில் தலையிட முடியாது என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com