திடீரென்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி! பட்ஜெட் பற்றி என்ன சொன்னார்?

திடீரென்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி! பட்ஜெட் பற்றி என்ன சொன்னார்?

எதிர்பாராதவிதமாக மோடி, இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்திருக்கிறார். பிரதமர் செய்தியாளர்களை சந்திப்பதில்லை என்று நீண்டகாலமாகவே விமர்சனம் இருந்து வந்தது. இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் முன்னர், திடீரென்று பத்திரிககையாளர்களை சந்தித்தது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

செய்தியாளர்களிடம் பேசிய மோடி, இந்தியாவின் வளர்ச்சியை உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. நாடு முழுவதும் நாம் பெருமைப்படக்கூடிய அளவில் பல வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்றவர், பட்ஜெட் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

நம்பிக்கையின் ஒளிக்கீற்று தெரிய ஆரம்பித்திருக்கிறது. அனைத்து எதிர்பார்ப்புகளையும் பட்ஜெட் நிறைவேற்றும் என்றும், எதிர்க்கட்சி நண்பர்கள் நல்ல முறையில் ஆரோக்கியமான முறையில் விவாதத்தை முன்னெடுப்பார்கள் என்று நம்பிக்கை கொள்வதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி, திடீரென்று இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தது தேசிய அளவில் விவாதமாகியிருக்கிறது. எத்தனையோ நெருக்கடிகள் வந்தபோதும் பத்திரிக்கையாளர்களை சந்திக்காதவர். ஊடகங்களை அவர் சந்திக்காதது குறித்து நாடாளுமன்றத்தில் பெரும் விவாதமே நடந்திருக்கிறது.

சென்ற முறை மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. பத்திரிகையாளர்களைச் சந்திக்க மோடி பயப்படுவதாக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன. ஆனால், மோடி தரப்பில் எந்தவித பதிலடியும் இருந்ததில்லை.

2019 தேர்தல் நேரத்தில் பாஜகவின் டெல்லி தலைமை அலுவலகத்தில் மோடியும் அமித் ஷாவும் செய்தியாளர்களை சந்தித்தார்கள். பிரதமரான பின்னர் மோடி கலந்து கொண்ட முதல் பிரஸ் மீட் அதுதான். அதில் கூடி பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் அமித்ஷாவே பதிலளித்தார். மோடி எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. இதுவும் பெரிய அளவில் விவாதப் பொருளானது.

2019ல் மறுபடியும் வெற்றி பெற்று மோடி பிரதமரானபின்னர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. முதல்முறையாக இன்றுதான் சந்தித்தார். அதிலும் கேள்விகள் எதுவும் எழுப்படவில்லை. பட்ஜெட் பற்றிய தன்னுடைய எதிர்பார்ப்புகளை மட்டும் குறிப்பிட்டுவிட்டு நாடாளுமன்றத்தை நோக்கி நடந்து சென்றார்.

‘தேர்தல் முடிவு தவறாக இருந்தால் பழியை ஏற்க வேண்டிய நபர் அமித்ஷா என்ற தகவலை தெரிவிப்பதற்காகவே மோடி, பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் என நினைக்கிறேன்,’ என்று சென்ற முறை நடந்த பிரஸ் மீட் பற்றி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருந்தார். நாளை பட்ஜெட் வெளியாக இருக்கும் நிலையில் இன்று மோடி பத்திரிக்கையாளர்களை சந்தித்ததிலும் அதே போன்று உள்நோக்கம் இருக்குமென்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பட்ஜெட் பற்றிய எதிர்பார்ப்புகள் உச்சத்தில் இருப்பது நிஜம். வரப்போவது சாதா பட்ஜெட்டா, ஸ்பெஷல் பட்ஜெட்டா? நாளை தெரிந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com