பாட்டிலில் QR Code! கள்ள சாராயக் கடத்தலில் ஈடுபடும் பீகார் பெண்கள்! தமிழ்நாடு போல டாஸ்மாக் கலாச்சாரத்திற்கு வருகிறதா, பீகார்?
பீகார், தமிழ்நாடு போல் அல்ல. அங்கே மதுவிலக்கு அமலில் இருக்கிறது. அதனால் கள்ளச்சாராயம், கடத்தல் என்பதெல்லாம் சகஜமான விஷயம். தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்கள்தான் அதிகளவு போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், பீகாரின் நிலைமை தலைகீழ்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படிக்காதவன் படத்தில் வரும் காட்சிகள் பீகாரில் நிஜத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. இடுப்பில் சாராய பாட்டில்களை வைத்துக்கொண்டு, கர்ப்பிணி போல் ரஜினியை ஏமாற்றிக் கொண்டிருப்பார், அம்பிகா. பாட்டில்களை டெலிவரி செய்துவிட்டு திரும்பி வரும் அம்பிகாவை பார்த்து குழம்பிப் போகும் ரஜினியிடம் பிரசவம் முடிந்து, குழந்தை பிறந்து பள்ளிக்கு போயிருப்பதாக அம்பிகா சொல்வார்.
பீகாரிலும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் கள்ளச் சாராய வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம். சாராய பாட்டில்களை ஒளித்து வைத்து கடத்தியதாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது.
ஸ்விக்கி, சொமோட்டோ, டெலிவரோ, டோமினோ என்று ஏகப்பட்ட தனியார் நிறுவனங்கள் உணவுப் பொருட்களை டெலிவரி செய்வது போல், கள்ளச் சாராயத்தை வீட்டுக்கு வீடு டெலிவரி செய்து வருவதுதான் பீகார் அரசை திகைக்க வைக்கிறது. படித்த பெண்கள் கூட இதில் ஈடுபடுவதாக பீகார் அரசு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
ஓரிடத்திலிருந்து சாராயப் பாட்டில்களை எடுத்துக்கொண்டு, உடலில் மறைத்து வைத்து இன்னொரு இடத்தில் டெலிவரி செய்ய வேண்டும். பகல் நேரப்பணி என்றாலும் காவல்துறை நடமாட்டமில்லாத தெருக்களின் வழியாக பத்திரமாக கொண்டு சேர்க்க வேண்டும்.
பாட்டிலில் உள்ள QR கோடு ஸ்கேன் செய்து பணத்தை செலுத்தினால் போதும். டெலிவரி செய்த பெண்ணுக்கு கமிஷன் அனுப்பி வைக்கப்படும். பாரின் சரக்குகளாக இருந்தால் விலையும் அதிகம். அதற்காக தரப்படும் கமிஷனும் அதிகம் என்பதால் பெண்கள் விருப்பத்துடன், துணிச்சலாக செய்து வருகிறார்கள்.
இதே பணியை ஆண்கள் செய்தால் கமிஷன் குறைவாகவே கிடைக்கும். காவல்துறையின் சோதனையில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பும் அதிகம். ஆண்களில் நிறைய பேர் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யாமல் பாட்டிலோடு மாயமாகிவிடுகிறார்கள்.
பெண்களால் இதை திறம்பட செய்ய முடிகிறது. குறித்த நேரத்திற்குள், காவல்துறையின் சோதனையில் சிக்காமல் சரியான இடத்தில் டெலிவரி செய்துவிடுகிறார்கள் என்று பராட்டுகிறார்கள் பீகாரின் சாராய வியாபாரிகள்.
பீகார் மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் சாராயக் கடத்தல் தொடர்ந்து வருகிறது. இதில் சம்பந்தப்படும் பெண்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாராய பாட்டில்களை விற்பதோ, பதுக்கி வைப்பதோ, பொதுவிடங்களில் குடிப்பதோ தடை செய்யப்பட்டிருக்கிறது.
மதுவிலக்கை அமல்படுத்துவதில் பீகார் அரசு தடுமாறுகிறது. தமிழ்நாடு போல் டாஸ்மாக் கலாச்சாரத்திற்கு வந்துவிட்டால் நிம்மதியாக இருந்துவிடலாம் என்கிறார்கள். வேறு வழி?