பொங்க வைக்கும் பால் பாலிடிக்ஸ் - நந்தினிதான் எங்க பிராண்ட்; அமுலை உள்ளே விடமாட்டோம்!
கர்நாடகாவின் நந்தினி என்பது நம்மூர் ஆவின் போன்றது. கர்நாடகாவின் பெருமைக்குரிய அடையாளம். ஒவ்வொரு கன்னடர்கள் வீட்டிலும் நந்தினி பால் பாக்கெட்தான் அன்றைய நாளை ஆரம்பித்து வைக்கிறது. நந்தினிக்குப் போட்டியாக கர்நாடகா மாநிலத்தில் அமுல் திணிக்கப்படுவதாக கன்னடர்கள் பொங்கியெழுந்திருக்கிறார்கள்.
கர்நாடக பால் கூட்டமைப்பு, நந்தினி என்னும் பெயரில் பால், தயிர், மோர் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்து வருகிறது. ஒப்பீட்டளவில் நம்மூர் ஆவின் கட்டமைப்பை விட நந்தினி இரண்டு மடங்கு பெரியது. இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய பால் கூட்டமைப்பாகவும் தென்னிந்தியாவைப் பொறுத்த வரை, விற்பனை மற்றும் பால் கொள்முதல் விஷயங்களில் முதலிடத்தில் இருக்கிறது.
மாண்டியா விவசாயிகளிடம் நந்தினி நிறுவனம் நேரடி தொடர்புகளை கொண்டிருக்கிறது. கர்நாடகா முழுவதும வலுவான நெட்வொர்க்கை உருவாக்கியிருக்கிறது. விவசாயிகளிடம் இருந்து பாலை நேரடியாக பெற்று, கன்னட மக்களுக்கு விநியோகித்து வருகிறது. பால், தயிர் சம்பந்தப்பட்ட பொருட்களை கடந்த 50 ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த அமுல் நிறுவனம், கர்நாடக மாநிலத்தில் கால் பதித்தது. பெல்காம், ஹீப்ளி உள்ளிட்ட வட கர்நாடகப் பகுதிகளில் அமுல் நிறுவனம் கணிசமான ஆதரவை பெற்றிருக்கிறது. இதற்கு பா.ஜ.க அரசு தந்த ஆதரவுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
அமுல் நிறுவனத்தின் அடுத்தக்கட்ட திட்டம், பெங்களூர் பகுதியில் தடம் பதிப்பது. அதற்கான பணிகளை ஆரம்பித்தபோதுதான் கன்னட மக்களிடையே எதிர்ப்பு வலுத்திருக்கிறது. பெங்களூரில் அமுல் நிறுவனத்தின் பொருட்கள் இணை வழியில் ஆர்டர் செய்தால் வீடுகளுக்கு பால், தயிர், மோர் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தது.
நந்தினி பால் விற்பனையை முடக்கவும், கர்நாடக பால் கூட்டமைப்பை அழிக்கவும் பா.ஜ.க அரசு திட்டமிட்டு முயற்சிகளை எடுத்து வருவதாக கன்னட அமைப்புகள் களத்தில் இறங்கின. அமுல் பால் விற்பனைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், அமுல் நிறுவனத்திற்கு எதிராகவும், நந்தினி நிறுவனத்தை பாதுகாக்கவும் ஆதரவு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
நந்தினி நிறுவனத்தின் பால், தயிர் தவிர மற்ற எந்த நிறுவனத்தின் பாலையும் வாங்க கூடாது என்ற பிரசாரமும் ஆரம்பமாகி உள்ளது. இது நாட்டின் பிற பகுதிகளிலிருந்து புலம் பெயர்ந்து பெங்களூரில் வசிப்பவர்களை சங்கடப்படுத்தியிருக்கிறது. அமுல்
நிறுவனத்தின் பால், தயிர் தவிர பிற பொருட்கள் ஏற்கனவே பெங்களூரில் தாராளமான கிடைத்துவந்தன. தற்போதைய எதிர்ப்பால் அனைத்தும் தடைப்படும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் 'கோபேக்' அமுல் மற்றும் 'சேவ் நந்தினி' உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன. கர்நாடகாவில் உள்ள தனியார் ஹோட்டல் உரிமையாளர்களும், உள்ளூர் அமைப்புகளும் கன்னடத்து விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் நந்தினி நிறுவனத்தின் பால் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்குவதால் காங்கிரஸ் கட்சி, சரியான நேரத்தில் பால் பாலிடிக்ஸை கையிலெடுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரான சீத்தராமையா, கன்னட மக்கள் அமுல் நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்கக் கூடாது என உறுதி எடுத்து கொள்ள வேண்டும் என்று பேசியிருக்கிறார். அவரது போட்டியாளரான டி.கே. சிவகுமார், நந்தினி பால் விற்பனை அங்காடிக்கு தொண்டர்களோடு சேன்று, பால் பொருட்களை வாங்கி மக்களுக்கு விநியோகம் செய்திருக்கிறார்.
எது எப்படியோ, நந்தினி நிறுவனத்தின் பால் விற்பனை கூடுதலாக பத்து லட்சம் உயர்ந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.